திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்; அகில இந்திய பிரச்னையாக நீட் தேர்வு விவகாரம் மாறியுள்ளது.! நிச்சயம் நல்ல முடிவு வரும் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: சமூக நீதி, மாநில உரிமை, கல்வி உரிமைகளுக்கு எதிரான ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடந்தேறியுள்ள மோசடிகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு, தலைமை நிலைய அலுவ­ல­க செய­லா­ளர்­ பூச்சி முருகன், மாணவர் அணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவர் அணி செயலளர் என்.எழிலன், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கூட்டணி மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், நீட் என்னும் அநீதியை ரத்து செய் என்ற பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், எழிலரசன் பேசுகையில், ‘ நீட் தேர்வை ஒழிக்கும் வரை திமுக மாணவர் அணி ஓயாது, தேவைப்பட்டால் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டத்தை எடுத்து செல்வோம்’’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தீர்மானத்திற்கு வெற்றி கிடைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது, அகில இந்திய பிரச்னையாக நீட் மாறியுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பிய நேரத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளலாம் என்று சபாநாயகர் கூறினார்.

ஆனால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை முடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றால் இதற்கெல்லாம் பதில் சொல்ல பயந்து கொண்டு தான் ஓடிவிட்டார்கள் என்று தான் அர்த்தம் என்று கருத தோன்றுகிறது. உச்சநீதிமன்றம் இந்த மோசடி ஊழலை பார்த்து கொண்டிருக்கிறது. நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். திமுக எடுத்த முடிவு நல்ல முடிவு என்று அனைவரும் இன்று உணர ஆரம்பித்து விட்டனர். ஒரு காலத்தில் திமுக மட்டும் பேசி கொண்டிருந்தது. இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகிறது. இன்று காலையில் தாமாக முன்வந்து நடிகர் விஜய், தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது, அகில இந்திய அளவில் இந்த பிரச்னை பரவலாகி உள்ளது. நல்ல முடிவு வரும். நாடாளுமன்றம் தற்போது வேறு மாதிரி உள்ளது.

நிச்சயமாக நல்ல முடிவு வரும். ஒரு அரசாங்கமே நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது. கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற விஜய்யின் கருத்து வரவேற்கத்தக்கது. ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளதில் தொடர்பு உள்ளதாக மோடி படம் வந்திருக்கிறது. நிர்மலா சீதாராமன் மற்றும் அண்ணாமலையின் படம் வந்துள்ளது. எடப்பாடி படம் வந்துள்ளது. ஒரே ஒரு சாராய வியாபாரியுடன் போட்டோ இருந்ததற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்த அண்ணாமலை தற்போது ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறார். அப்போது மோடிக்கும் ரூ.167 கோடிக்கும் தொடர்பு உள்ளது என்று நான் சொல்லட்டுமா? போலி சாமியாரை பார்ப்பதற்காக சென்ற 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அண்ணாமலை 167 கோடிக்கு முதலில் பதில் சொல்லட்டும். பிறகு நான் பதில் சொல்கிறேன்.

The post திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்; அகில இந்திய பிரச்னையாக நீட் தேர்வு விவகாரம் மாறியுள்ளது.! நிச்சயம் நல்ல முடிவு வரும் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: