இந்தியர்களின் இதயங்களில் சிகரமாக உயர்ந்து நின்ற அப்துல் கலாம் 8-ம் ஆண்டு நினைவு நாள்

ராமேஸ்வரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, தேசத்தின் உன்னத தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். புகழ் பெற்ற அறிவியல் அறிஞராகவும், ஒட்டுமொத்த தேசத்தின் அன்புக்குரிய குடியரசுத் தலைவராகவும் இருந்த கலாம்,இளம் தலைமுறைக்கு உத்வேகமூட்டும் ஊக்க சக்தியாகவே இறுதிவரை இருந்தார். தனது வாழ்வே, தான் விட்டுச் செல்லும் செய்தி என்றே நம்பினார். அவரது வாழ்வும், எழுத்துகளும், இளைஞர்களிடம் அவர் ஆற்றிய உரைகளும் லட்சியப் பாதையில் பயணித்த முன்னோடி நமக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள்.

இளம் வயதிலேயே லட்சியங்களை வகுத்துக் கொண்டதன் மூலம் வெற்றிப் படிகளை நோக்கி நடைபோட்டார் கலாம். புதுமை புனையும் சிந்தனைகளுக்கு ஒரு தூண்டுசக்தி பிரார்த்தனையில் பிறக்கிறது என்று உறுதியாக நம்பினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டப் படிப்பை முடித்த பின்னர், வானூர்தி பொறியியல் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கினார். எம்.ஐ.டி-யில் வானூர்தி பொறியியல் படிப்பை முடித்தவுடன் டிஆர்டிஓவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணிபுரிந்த அப்துல் கலாமுக்கு ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ் மெண்ட்டிடமிருந்து அழைப்பு வந்தது.

அதில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில், இஸ்ரோவில் பணிபுரியும் வாய்ப்பும் அவரைத் தேடிவந்தது. இப்படி அவரது கடும் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் அன்புக்குப் பாத்திரமானார். இஸ்ரோவில் பணிபுரிந்த காலக்கட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் பயிற்சி பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. தென்கோடி ராமேஸ்வரத்தில் பிறந்த கலாமின் புகழ், வடகோடி டெல்லியின் அதிகார வாசல் வரை பரவி நிற்கிறது. ‘எஸ்.எல்.வி-3’ என்ற செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை உருவாக்கியதில் தொடங்கி ஏவுகணைகளையும் வடிவமைத்துத் தயாரித்து இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற ஏற்றத்தைப் பெற்றார்.

அணுசக்தித் துறைக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்புக்கும் இணக்கமான பாலமாக இருந்தார். விண்வெளி ஏவு ஊர்தி தயாரிப்பு, அணுகுண்டு வெடிப்பு, ஆயுதசாலைகள் அமைப்பு என்று அனைத்திலும் முத்திரை பதித்தார். ஊனமுற்ற குழந்தைகள் வலியில்லாமல் நடக்க தாங்கு கட்டைகள் தயாரித்துத் தந்த போது தான் பெரிதும் மகிழ்ந்ததாகக் கூறினார். 1980-ல் அப்துல் கலாமின் தலைமையில் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது ஒரு குறிப்பிடத் தக்க சாதனை. ராக்கெட் தொழில் நுட்பத்தில் அதுவரை வலிமை பெற்றிருந்த ஐந்து நாடுகளுடன் ஆறாவதாக இந்தியாவும் இணைந்தது அப்போதுதான். இதே வலிமை கொண்ட ராக்கெட்டைத் தயாரித்து வெற்றிகரமாக ஏவ, அமெரிக்காவுக்குச் சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் பிடிக்கும் சூழலில், வெறும் ஏழே ஆண்டுகளில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்தது. அதற்குக் கலாம் பெரிதும் துணை நின்றார். இப்படி கடும் உழைப்பு, அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இயங்கிய கலாம், பல சோதனைகளைக் கடந்து பல வெற்றிகளை ருசித்தவர்.

குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக இருந்தார். ராஷ்டிரபதி பவனில் அதிகமான பொதுமக்கள் உள்ளே நுழைய முடிந்த காலக்கட்டம், கலாமுடைய காலக்கட்டமாகவே இருக்கும். பெரும்பகுதி விருந்தினர்கள் குழந்தைகள் – மாணவர்கள்தான். அவரைச் சந்தித்துவந்த பலர் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிந்தது. அவருடன் தொலைபேசியில் பேச முடிந்தது. மின்னஞ்சல் அனுப்பிப் பதில் பெற முடிந்தது. அவருக்குக் கடிதம் எழுதினால், நிச்சயம் பதில் வரும்.“தனி மனிதப் பண்பு, திறன், எதிர்காலம் போன்றவற்றை வளர்த்தெடுக்கும் உன்னதமான வாழ்க்கைத் தொழில்தான் கற்பித்தல் பணி. ஒரு சிறந்த ஆசிரியர் என மக்கள் என்னை நினைத்தால் அதுதான் எனக்கு மிகப் பெரிய கவுரவம்” என்றவர் கலாம். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கிய, ஆனால் அரசியல் தலைவர்களை விடவும் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். காரணம் தேச வளர்ச்சியின் மீதும், எதிர்காலத் தலைமுறை மீதும் அவர் தொடர்ந்து அக்கறை செலுத்திவந்தார். நிலையான பொருளாதாரத்தை உருவாக்க தேசம் கொள்ள வேண்டிய பார்வை எனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினார். தேசத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த வெளிநாடுகளை நம்பி இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், அதற்குப் பதிலாக தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்றம் உயிர்ப்பான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இறுதி வரை இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் தரும் சக்தியாக இருந்தார். செல்லும் இடங்களில் எல்லாம், ‘கனவு காணுங்கள்’ என்று இளம் தலைமுறையினரைக் கேட்டுக்கொண்டார். வரும் தலைமுறை, நாட்டுக்குப் பெற்றுத் தரும் ஒவ்வொரு வெற்றியும் அவர் கண்ட கனவின் பலன் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு இந்தியர்களின் இதயங்களிலும் சிகரமாக உயர்ந்து நின்றவர் டாக்டர் அப்துல் கலாம்.

The post இந்தியர்களின் இதயங்களில் சிகரமாக உயர்ந்து நின்ற அப்துல் கலாம் 8-ம் ஆண்டு நினைவு நாள் appeared first on Dinakaran.

Related Stories: