விளம்பரத்திற்காகவே அதிமுகவினர் விதிகளுக்கு முரணாக செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் காட்டம் : கூட்டத் தொடர் முழுவதும் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!!

சென்னை : தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய போது, கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேச அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் விதிகளை சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர், “8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார். எனினும் சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து அதிமுவினர் அமளி செய்ததை தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் அவை வாயிலில் இருந்து முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய அவை முனைவர் துரைமுருகன், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர். கருப்பு சட்டை அணிவதற்கான காரணத்தை அதிமுகவினர் அவையில் பேசுவதில்லை. முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் அவைக்குள் வந்திருக்க வேண்டும். அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று கூற வேண்டியதை கூறியிருந்தால் அவர்களை கிழி கிழி என்று முதல்வர் கிழித்திருப்பார்.

நடக்கக்கூடாதது நடந்துவிட்டது அதற்கான பரிகாரங்களை முதல்வர் செய்துள்ளார். முதலமைச்சர் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என்பதாலேயே அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார். அவை முன்னவரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததால் பேரவை விதிகளின்படி அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அவைக்கு வந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post விளம்பரத்திற்காகவே அதிமுகவினர் விதிகளுக்கு முரணாக செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் காட்டம் : கூட்டத் தொடர் முழுவதும் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.

Related Stories: