சட்டப்பேரவையில் கடும் அமளி.. வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!

சென்னை: வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்; பேரவைத் தலைவர் அவர்களே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனாலும், மக்கள் பிரச்சினையைப் பற்றி இப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்று முதல்வர் கூறியுள்ளார்.

The post சட்டப்பேரவையில் கடும் அமளி.. வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: