சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு ED அனுப்பிய சம்மனுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு ED அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்வதாகவும் அமலாக்கத்துறை அந்தந்த குவாரிகளில் சோதனை நடத்தியது. அதில் பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்தது.

இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த சம்மனுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இதனிடையே, இந்த வழக்கில் ஆர்எஸ்ஆர்எப் கன்ஸ்ட்ரக்டன் நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், சண்முகம், சென்னை ராஜ்குமார் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில், அமலாக்கத்துறை வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவசர கதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்மனை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை அமலாக்கத்துறை சம்மனை செயல்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தரமோகன் அமர்வு தடை விதித்தது. ஏற்கனவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தன் மீது புகார் இல்லாதவர்களுக்கும் சம்மன் அனுப்பி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அமலாக்கத்துறை முயற்சிப்பதாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது. சாட்சியா, குற்றம் சாட்டப்பட்டவரா என்பதை கூறாமலேயே விசாரணைக்கு வருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.

The post சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு ED அனுப்பிய சம்மனுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: