கனமழையால் வடமாநிலங்கள் தத்தளிப்பு வெள்ளக்காடானது இமாச்சல பிரதேசம்: 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு

புதுடெல்லி: வடமாநிலங்களில் தொடர்ந்து 3வது நாளாக பெய்து வரும் கனமழையால் டெல்லி, பஞ்சாப், அரியானாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் இமாச்சலபிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். யமுனை உள்ளிட்ட பல ஆறுகளில் நீர்மட்டத்தை அபாய கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழைக்கு 19 பேர் இறந்த நிலையில், நேற்றும் 3வது நாளாக பல பகுதிகளில் பேய் மழை கொட்டியது. குறிப்பாக, இமாச்சல பிரதேசம் மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா நகரமான மணாலியில் வெள்ளத்தில் சிக்கிய 20 பயணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்ட நிலையில், மேலும் 400 பேர் பல பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

கனமழை வெள்ளத்தால் வீடுகள், கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல கார்கள் ஆற்றில் காகித படகு போல மிதக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே நேற்றும் இமாச்சலில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று, இன்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘50 ஆண்டுகளில் இதுபோல் எப்போதும் கனமழை கொட்டியதில்லை. கனமழையின் போது ஆறுகள், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும். கனமழையால் ரூ.3000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார். பிரதமர் மோடியும், இமாச்சல் முதல்வர் சுக்விந்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேவையான அனைத்து உதவிகளையம் ஒன்றிய அரசு செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இதே போல, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் பல பகுதிகளில் நேற்று மழை கொட்டியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல சாலைகள், சிறு பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிராமப்புறங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அரியானா ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்துவிட்டதால், டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி உள்ளது. இமாச்சல், சண்டிகர், அரியானாவில் பல ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் நாளை மறுதினம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் மோடி மழை பாதிப்புகள் குறித்து மூத்த ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலக டிவிட்டரில், ‘மழை நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். உள்ளாட்சி நிர்வாகம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

The post கனமழையால் வடமாநிலங்கள் தத்தளிப்பு வெள்ளக்காடானது இமாச்சல பிரதேசம்: 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: