குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதுமுள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு கடந்த 2022-23ம் கல்வியாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. நடப்பாண்டுக்கான க்யூட் – யுஜி தேர்வு கடந்த மே 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. முதல்முறையாக கலப்பு முறையில் 2 அல்லது 3 வேளைகளில், 15 தேர்வுகள் பேனா – காகிதம் முறையிலும், 48 பாடங்களுக்கு கணினி வாயிலாகவும் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 30ம் தேதி வௌியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவு வௌியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே க்யூட் – யுஜி தேர்வு நடைபெற்ற சில மையங்களில் நேர தாமதம், தொழில்நுட்ப கோளாறுகளால் தேர்வு எழுதுவதில் சில குறைகள் இருந்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேரவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தரப்பில் கூறப்படும் குறைகள் சரியானது என்று கண்டறியப்பட்டால் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

The post குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: