தொழில் முனைவோர்கள் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும்

*மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு

ஊட்டி : ஊட்டியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் முகாமில் 40 பயனாளிகளுக்கு ரூ.4.98 கோடி கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் ரூ.98.08 லட்சம் மானிய தொகை ஆணைகள் வழங்கப்பட்டன.நீலகிரி மாவட்டம், ஊட்டி தோட்டக்கலை வளாகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை வகித்து, 40 பயனாளிகளுக்கு ரூ.4.98 கோடி கடன் ஒப்பளிப்பு ஆணைகள், ரூ.98.08 லட்சம் மானிய தொகைக்கான ஆணைகள், மகளிர் திட்டம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி கடனுதவியையும் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் நோக்கத்திலும் மற்றும் நீலகிரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கடன் ஆண்டு இலக்கினை எய்திடும் நோக்கத்திலும் இம்முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 9 வங்கிகள் மூலம் 40 பயனாளிகளுக்கு ரூ.4.98 கோடி கடனுதவிகள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்ட பயனாளிகளுக்கு ரூ.98 லட்சம் மதிப்பீட்டிலான மானிய ஆணைகள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 10 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.1.19 கோடி கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
நம் மாவட்டம் டீ மற்றும் சுற்றுலாவை நம்பியுள்ள மாவட்டமாகும். காடும், காடு சார்ந்த இடமாக நமது மாவட்டம் உள்ளதால், தொழில் சார்ந்த நிறுவனங்கள் குறைவாக உள்ள காரணத்தினால் மாவட்ட தொழில் மையம் மூலமாகவும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாகவும் புதிய தொழில் துவங்க பல்வேறு கடனுதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. நீலகிரியில் தொழில் நிறுவனங்கள் குறைவாக இருப்பதால் படித்து முடித்த வேலைநாடுநர்கள் அரசுப்பணி மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் வேலையில் சேர அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றைய கால இளைஞர்கள் சுய தொழில் செய்து ஒரு தொழில் முனைவோராக மாற தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனெனில் சுய தொழில் செய்தால் இழப்பு ஏற்பட்டு விடுமோ எனவும், இழப்பு ஏற்பட்டால் எவ்வாறு அதில் இருந்து மீள்வது என்ற குழப்பம் தான் காரணம்.

இதனை கருத்தில் கொண்டு தான் தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு மகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் கடன் வழங்கப்படுகிறது. ஒருவர் ஒரு தொழில் முனைவோராக மாற வேண்டுமானால் அந்த தொழில் தொடங்க முதலீடு குறித்து திட்டமிட வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்தும், அதற்கு தனக்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும் எனவும் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது.

இதுபோன்ற பல்வேறு மானிய திட்டங்கள் மற்றும் கடனுதவி திட்டங்கள் குறித்து இம்முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோராக மாறும் பட்சத்தில் தங்கள் தொழில் அனுபவத்தோடு லாபகரமாக கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். ஏனெனில் ஒரு அரசு அலுவலரால் கூட யாருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர முடியாது. ஆனால் ஒரு தொழில் முனைவோரால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.

ஒரு தொழில் செய்வதால் போட்டிகள் உருவாகும். தொழில் முனைவோர்கள் எதிர்காலத்தையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை டீ மற்றும் சுற்றுலா என்பது காலத்தால் அழியாத தொழிலாகும். நெகிழி இல்லாத மாவட்டமான நீலகிரியில் நெகிழி பயன்பாட்டிற்கு மாற்று பொருளை பயன்படுத்தும் வகையில் தொழில் துவங்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கரபாணி, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், வங்கி முதன்மை மேலாளர்கள், பல்வேறு அரசு துைற அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தொழில் முனைவோர்கள் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: