அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் செல்போனில் எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்: பேரிடர் மேலாண்மை சோதனை வெற்றி

சென்னை: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின்போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை ஓட்டம் 20ம் தேதி (நேற்று) நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, நாடு முழுவதும் செல்போன் மூலம் அனைவருக்கும் ‘எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்’ நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த, ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. அதாவது, கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்பு செய்திகள், பேரிடர் ஆபத்தான பகுதிகளில் இருந்தால் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க இந்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.

நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, பொதுமக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கைகள் மெசேஜ்வந்தது. இது சோதனை அடிப்படையில் செய்து பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஆகும். பொதுமக்களுக்கு நேற்று அனுப்பப்பட்ட அலர்ட் செய்தியில், ‘‘இது இந்திய அரசின் தொலைதொடர்பு துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை செய்தி. உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது’’ என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதாகவும், பொதுமக்கள்இந்த எச்சரிக்கையை எளிதில் புரிந்து கொண்டனர் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் செல்போனில் எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்: பேரிடர் மேலாண்மை சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: