கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

குறைப் பிரசவமா? கண்கள் கவனம்!

தர்ஷனுக்கு ஆறு வயது. நேற்றைய தினம் அவனது அம்மா அப்பாவுடன் என்னைப் பார்க்க வந்திருந்தான். வெட்கத்தில் அம்மாவைக் கட்டிக்கொண்டவன் முகத்தைக் காட்டவே இல்லை. பல வார்த்தை ஜாலங்களைப் பிரயோகித்து அவனைத் திரும்பச் செய்தேன். கண்கள் வழக்கத்தை விட சற்றுப் பெரியவையாக இருந்தன. அவனது அம்மா, “மேடம் இவன் குறை மாசத்துல பிறந்த குழந்தை. ஏழு மாசம் முடிகிறதுக்கு முன்னாடியே பொறந்துட்டான். அதனால பிறந்தவுடனே அடிக்கடி கண்ணுக்கும் செக் பண்ணினோம். ஒரு தடவை லேசர் வச்சாங்க. அதுக்கப்புறம் வருஷா வருஷம் செக் பண்ண சொன்னாங்க. இப்ப ரெண்டு வருஷமா நாங்க செக்கப் போகலை” என்றார். அவரது கையில் முன்பரிசோதனை ஆவணங்கள் எதுவும் இல்லை.

எத்தனாவது வாரம் பிறந்தான், எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்யப்பட்டது, எப்பொழுது லேசர் வைக்கப்பட்டது என்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அவனைப் பரிசோதிக்க முயன்றேன். வெட்கம் நீங்கி பரிசோதனைக்கு ஒத்துழைத்தான் தர்ஷன். அவனால் ஸ்னெல்லன் அட்டையில் (Snellen Chart) எந்த எழுத்தையும் பார்க்க முடியவில்லை. நான்கு அடி தூரம் வரையில் மட்டுமே விரல்களைக் காட்டினால் அவனால் சொல்ல முடிந்தது.

அவனுக்கு சிறுவயதில் ஏற்பட்டிருந்தது (Retinopathy of prematurity) என்ற பிரச்சனை. வழக்கமாகத் தாயின் கருவில் குழந்தை வளரும் பொழுது ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு உறுப்புகளின் வளர்ச்சி படிப்படியாக நடைபெறும். குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பாக, இறுதி சில வாரங்களில் தான் விழித்திரையின் ரத்த நாளங்கள் முழுவதுமாக வளர்ந்து தங்கள் முழு வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும். குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, குறிப்பாக 32 வாரங்களுக்குக் கீழ் பிறந்த குழந்தைகளுக்கு ரத்த நாளங்களின் வளர்ச்சி சரியாக இருக்காது. விழித்திரையின் நடுவில் (central retina) நல்ல முறையில் வளர்ந்திருக்கும் ரத்த நாளங்கள், ஓரத்திற்கு செல்லச் செல்ல (peripheral retina) மிகக்குறைவாகவே வளர்ந்திருக்கும்.

இந்த நோயை ஐந்து நிலைகளில் அடையாளப்படுத்த முடியும். முதல் நிலையில் இரத்தநாளங்கள் நன்றாக இருக்கும் பகுதிக்கும் மற்ற பகுதிக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு இருப்பதைக் காணலாம். இதற்கு அடுத்த நிலை நோயில் மெல்லிய கோடு இருக்கும் பகுதியில் சின்ன சுவர் போல் காணப்படும். இந்த சுவருக்குள் இரத்த நாளங்கள் நுழைவதையும் பாப்கார்ன் போல் ஆங்காங்கே சிறிய ரத்தக் கசிவுகள் குவியல்களாகத் தென்படும்.

மூன்றாவது நிலையில் விழித்திரையில் இருந்து நீர்ப்படிமம் பகுதிக்குள் மெல்லிய, ஒட்டடை போன்ற தழும்பு ஏற்படுத்தக்கூடிய நார்கள் வளர்வதைக காணலாம். நான்காவது மற்றும் ஐந்தாவது நிலைகள் சற்றே தீவிரமானவை. நான்காவதில் விழித்திரை தன் நிலையிலிருந்து பாதியளவில் விலகி இருக்கும் (partial retinal detachment). ஐந்தாவது நிலையில் விழித்திரை முழுவதுமாக பிரிந்திருக்கும்.

இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கிறதா என்று பார்ப்பதற்காக ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒரு வாரம் முதல் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டே இருப்பார்கள். அரைகுறையான இரத்த நாளங்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அந்த புதிய ரத்த நாளங்கள் லேசர் கதிர் மூலமாக நிரந்தரமாக மேற்கொண்டு வளர விடாமல் தடுக்கப்படும். ஏனெனில் இத்தகைய ரத்த நாளங்கள் மிக மெலிதானவை. விழித்திரையின் குறிப்பிட்ட பகுதிக்குத் தேவையான ஊட்டத்தை அவற்றால் கொடுக்க முடியாது. கூடவே ரத்தக்கசிவும் ஏற்படும்.‌ தொடர் பரிசோதனையின் மூலமே அதை விரைவில் கண்டுபிடிக்க முடியும்.

நூற்றில் எட்டு குழந்தைகளுக்கு மட்டுமே லேசர் சிகிச்சை தேவைப்படும். வளர்ச்சிக் குறைபாடுடைய ரத்த நாளங்களில் மட்டுமின்றி, ரத்தநாள கண்கள் ஏதுமற்ற விழித்திரையின் ஓரப் பகுதியிலும் (peripheral avascular retina) லேசர் சிகிச்சை செய்வார்கள். இது விழித்திரை விலகலைத் (retinal detachment) தடுக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு ரத்த நாளங்கள், கர்ப்பகாலத்தில் வளர்வதைப் போலவே பிறப்பிற்கு பிறகும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சீராக வளர்ந்துவிடும்.

தர்ஷனுக்கு அவற்றின் வளர்ச்சியில் குறைபாடு இருந்திருக்கக் கூடும். அதனால் தான் அவனுக்கு லேசர் சிகிச்சை செய்திருக்கிறார்கள். பொதுவாகக் குறைமாதக் குழந்தைகளுக்கு வேறு சில கண் பிரச்சனைகளும் இருக்கக் கூடும். எனவே தர்ஷனின் கண்களை முழுவதுமாக சோதித்தேன். அவனுக்குக் கிட்டப் பார்வை குறைபாடு மிக அதிகமாக இருந்தது. பரிசோதனையில் வலது கண்ணில் -12.0 DSphம் இடது கண்ணில் -10.0 லென்ஸும் இருக்கக்கூடிய கண்ணாடி அவனுக்கு தேவைப்பட்டது. கூடவே இரண்டு கண்களிலும் -3.50 DCylசிலிண்டர் லென்ஸும் தேவைப்பட்டது. ‘சென்ற முறை செய்த பரிசோதனைகளில் இதைக் கட்டாயம் சொல்லி கண்ணாடியும் போடச் சொல்லி இருப்பார்களே? ஏன் போடவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘கண்ணாடி போடணும்னா போடுங்க, இல்லாட்டி வேண்டாம்னு சொன்னாங்க’ என்றார் தர்ஷனின் அம்மா.

எந்தக் கண் மருத்துவரும் அப்படிக் கூறியிருக்க வாய்ப்பேயில்லை. இது மிக அதிகமான குறைபாடு. கண்ணாடி போடத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பார்வை நிரந்தரமாகக் குறைய வாய்ப்பிருக்கிறது என்ற விளக்கினேன். “லேசர் வச்சாச்சு, இனிமேல் பிரச்சனை இல்லைன்னு சொன்னாங்களே, பிறகு ஏன் கண்ணாடி?” என்ற சந்தேகத்தை தர்ஷனின் தந்தை எழுப்பினார். லேசர் வைத்தது முற்றிலும் வேறு பிரச்சனைக்கானது, கிட்டப்பார்வைக் குறைபாடு- Spherical மற்றும் cylindrical power கண்ணின் அளவு தொடர்பானது. கண்களின் அச்சு நீளம் தர்ஷனுக்கு இயல்பை விட மூன்று முதல் நான்கு மில்லி மீட்டர் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

லேசர் வைத்ததால் மிக மெல்லிய அளவில் விழித்திரையின் நீள அகலத்தில் சற்று மாறுபாடு ஏற்பட்டு இருக்கலாம், அதுவும் cylinder power ஏற்பட ஒரு காரணமாக அமையக் கூடும். குறை மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கான விழித்திரை பிரச்சனை‌ ROP பார்வையையே பறித்து விடும் அளவிற்கு ஆபத்தானது. தர்ஷனுக்கு அந்த ஆபத்து முற்றிலும் நீங்கி விட்டது. சில குழந்தைகளுக்கு லேசர் சிகிச்சை, அதில் கட்டுப்படாதவர்களுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். அறுவை சிகிச்சை செய்தும் கூட பார்வை கிடைக்காத குழந்தைகள் ஏராளம். கூடுதலாக தர்ஷனுக்கு கண்ணாடி அணியக்கூடிய இந்த சிறிய பிரச்சனை இருக்கிறது. முறையாகக் கண்ணாடி அணிந்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்ணாடியின் அளவு சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதித்தாலே போதும் என்று விளக்கினேன்.

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், இதய நோய், உடல் பிரச்சினைகள், நரம்பியல் பிரச்சனைகள் என்று பல குறைபாடுகள் வரக்கூடும். அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் நேரம் கண்களை கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்பு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக வடமாநிலம் ஒன்றில் மேலைய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பரவலாக கவனிக்கப்பட்ட ஒன்று. தங்கள் குழந்தைக்கு பார்வையிழப்பு ஏற்பட்டு விட்டது, இனிமேல் சரி செய்ய முடியாது என்பதைக் குறை மாதத்தில் பிறந்த அந்தக் குழந்தையின் பெற்றோர் இரண்டு வயதிற்குப் பிறகு தான் உணர்ந்திருக்கின்றனர்.

பிறந்தவுடனேயே நீங்கள் பரிசோதனை செய்திருந்தால் இதை சரி செய்திருக்கலாம் என்ற தகவலும் அவங்களுக்குக் கிடைக்க, பிறந்தவுடன் சிகிச்சையளித்த மருத்துவமனை மேல் வழக்குப் பதிவு செய்துவிட்டார்கள். அந்த வழக்கின் முடிவில் மருத்துவமனை கோடிக்கணக்கான பணம் பெற்றோருக்குத் தர வேண்டும் என்று தீர்ப்பானது. இந்தத் தீர்ப்பு அதன் பின் பெற்றோர், மருத்துவர்கள் என பலருக்குக் கண் திறப்பாக அமைந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். இதன் தொடர்ச்சியாகவே அனைத்துப் பேறுகால வார்டுகளிலும் குறை மாதத்தில் பிறக்கும் பச்சிளம் சிசுக்களுக்கு கண் பரிசோதனை அவசியம் என்ற விதிமுறைகள் தீவிரமாக்கப்‌ பட்டிருக்கின்றன.

இன்னொரு தம்பதியின் இரட்டைக் குழந்தைகள், வேல்விழி மற்றும் வேலவன். அவர்களும் குறை மாதத்திலேயே பிறந்தவர்கள் தான். பிறந்த உடனேயே கண் பரிசோதனை செய்யப்பட்டது. இருவருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூற, தொலைதூர கிராமத்தில் இருந்து நகர்ப் புறத்திற்குச் சென்று மருத்துவர் கூறியபடியே பரிசோதனை செய்தார்கள். இரண்டரை மாதங்கள் கழித்த பின், இனிமேல் வர வேண்டாம் எல்லாம் நன்றாகிவிட்டது, ஒரு வருடம் கழித்து வாருங்கள் என்று மருத்துவர்கள் கூற, பாட்டி மருத்துவரிடம் சண்டை பிடித்து விட்டார்.

“அது எப்படி? எத்தனை தடவை செலவழிச்சு கூட்டிட்டு வந்திருக்கோம்? நாள் பூரா உக்காந்து டெஸ்ட் பண்ணி இருக்கீங்க, ஒன்னும் இல்லன்னு இப்ப சொல்றத முதல்லையே சொல்ல வேண்டியது தானே?” என்பது பாட்டியின் வாதம். இரட்டையர்களுக்கு இப்பொழுது எட்டு வயதாகிறது. இன்னும் பாட்டிக்கு ஆதங்கம் போகவில்லை. என்னிடம் வழக்கமான பரிசோதனைக்கு வருகையில் பாட்டி தன் மனக்குறையைத் தெரிவிக்க, உங்கள் நல்ல நேரம் கண் நாளங்கள் இயல்பாகவே நன்றாய் வளர்ந்திருக்கிறது.

இத்தகைய குழந்தைகள் எத்தனை பேருக்கு சிகிச்சையளித்தும் கண் பார்வை இல்லை தெரியுமா? அதனால் அலைச்சலையும் குழந்தைகள் அசௌகரியத்தையும் விட்டு விடுங்கள், தற்பொழுது குழந்தைகளின் பார்வை நன்றாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடையுங்கள் என்று கூற, “ஓஹோ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?” என்றார் பாட்டி!

The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.

Related Stories: