புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது..!!

சென்னை: புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியாகி தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்து அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.

இருப்பினும் போலியாக அவதூறு பரப்பிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். அதேநேரம் வடமாநிலத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே யூடியூபர் மணீஷ் காஷ்யப் என்பவர், தான் பணம் சம்பாதிப்பதற்காக பொய்யான வீடியோக்களை பரப்பியது விசாரணையில் அம்பலமாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

மணீஷ் காஷ்யப்பை திருப்பூர் போலீஸ் கைது செய்தனர். மணீஷ் காஷ்யப் மீது ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நீலாங்கரை போலீசாரும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து மணீஷ் காஷ்யப்பை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணீஷ் காஷ்யப்பை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: