நிலையான வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் முக்கியம்: ஜி-20 கூட்டத்தில் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நிலையான வளர்ச்சி, இலக்குகளை அடைவதற்கு பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை முக்கியமாகும் என பிரதமர் மோடி பேசினார். ஜி-20 மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டம் வாரணாசியில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: கலாச்சாரம், ஆன்மீகத்தின் மையமாக பல நூற்றாண்டுகளாக வாரணாசி திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் பலதரப்பட்ட பாரம்பரியங்களின் சாரமாகவும் அது திகழ்கிறது. தெற்குலக பகுதிக்கு வளர்ச்சி மிக முக்கியமான விஷயம். கொரோனா பெருந்தொற்றால் உலகின் தெற்குலக நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட புவி, அரசியல் பதற்றம் காரணமாக உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால் நிலையான வளர்ச்சி ,இலக்குகளுக்கு பின்னடைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நமது கூட்டுப் பொறுப்பு ஆகும், மேலும் நிலையான வளர்ச்சியிலிருந்து யாரும் பின்னடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நமது முயற்சிகள் விரிவானதாகவும், நியாயமானதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும், அதனை அடைவதற்கு தங்களிடம் செயல் திட்டம் உள்ளது என்ற வலுவான செய்தியை உலகிற்கு இந்த குழு பறைசாற்ற வேண்டும். இந்தியாவில், டிஜிட்டல் மயமாக்கல் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது, இந்தியா தனது அனுபவத்தை கூட்டு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. இந்தியாவில், வளர்ச்சியடையாமல் பின்தங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகள் அடைவதற்கு பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை முக்கியமானவை. இவ்வாறு அவர் பேசினார்.

The post நிலையான வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் முக்கியம்: ஜி-20 கூட்டத்தில் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: