தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு தொடர்பாக நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை..!!

சென்னை: தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு தொடர்பாக நாளை மறுநாள் தலைமை செயலகத்தில் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட இருக்கின்றனர். தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படும். அதற்கு உரிய சம்பளம் வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பாமக, பாஜக ஆகிய கட்சிகளும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் சட்டமுன்வடிவு குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சட்டபேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமுன்வடிவின் முக்கிய அம்சங்கள் குறித்து, ஒன்றிய அரசினுடைய தொழிலாளர் நலச்சட்டத்தில் இருந்து தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்த சட்டம் எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை விளக்கி கூறுவும், இந்த திட்டத்திற்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள், பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் சட்டபேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் விரிவான விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் வரும் 24-4-2023 (திங்கள்கிழமை) அன்று மதியம் 3-00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

The post தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு தொடர்பாக நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: