புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஆன்லைன் மூலம் நுகர்வோர் இழப்பீடு பெறலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல்

சென்னை: ‘மின்வாரியத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நுகர்வோர் ஆன்லைன் மூலம் இழப்பீடு பெற்று கொள்ளலாம்’ என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய மின் அமைச்சகத்தின் மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள், 2020-ல் மேற்கொண்ட திருத்தங்களின் படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போதுள்ள செயல்திறன் விநியோக தரநிலை ஒழுங்குமுறைகள் 2004ல் உள்ள விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். மே 26க்குள் வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

இது குறித்து வரைவு திருத்தத்தில் கூறியிருப்பதாவது: மின் இணைப்புக்கு விண்ணபித்தால், ஒரு வாரத்தில் இணைப்பு வழங்க வேண்டும். முன்னதாக புதிய மின் இணைப்புகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம் இருந்தது. ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இணைப்புகளை வழங்க முடியாத சூழல் இருக்கும் பட்சத்தில், கால அவகாசத்தை நீட்டிக்கலாம். மேலும் கட்டுமான பணிகள், விழாக்கள் உள்ளிட்டவைகளுக்கு தற்காலிக மின் இணைப்பு கோருவோருக்கு 2 நாட்களில் மின் இணைப்புகளை வழங்க வேண்டும். கட்டணம் செலுத்தாமல் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் கட்டணம் செலுத்திய 6 மணி நேரத்தில் மீண்டும் வழங்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்தில் இணைப்புகளை வழங்கவில்லை என்றால் இழப்பீடு வழங்க வேண்டும். மீட்டர்கள் பழுதடைந்து செயல்படாமல் இருக்கும் நேரங்களில் சராசரி மின்நுகர்வு அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். மீட்டர்களை மாற்றுவதற்கான காலத்தை ஒரு மாதத்திலிருந்து ஒரு வாரமாக குறைக்க வேண்டும். பழுதடைந்த, எரிந்து போன அல்லது செயல்படாத மீட்டர்களை மாற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு நுகர்வோருக்கு வழங்க வேண்டும். மீட்டர் கிடைக்கவில்லை என்ற காரணத்தை இனி கூறக்கூடாது.
மீட்டர்களில் குறைபாடு அல்லது மீட்டர் அளவீடுகள் சரியாக இல்லை என கருதினால், மின் வாரியத்தின் ஆய்வகத்தில் ஒரு சிறப்பு சோதனையை நடத்த விண்ணப்பிக்கலாம்.

சோதனையின் முடிவில் நுகர்வோர் திருப்தி ஏற்படவில்லை எனில், ஆய்வகங்களுக்கன தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3ம் தர சோதனை ஆய்வகத்தில் மீண்டும் சோதனை செய்யலாம். சோதனை முடிவுகள் நுகர்வோருக்கு சாதகமாக இருந்தால், மின்வாரியம் செலவுகளைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், நுகர்வோர் செலவுகளை ஏற்க வேண்டும். மின்வாரியம் சேவைகளில் உள்ள குறைபாடுகளுக்கு இழப்பீடுகளை தானாகவோ அல்லது நுகர்வோரின் கோரிக்கையின் பேரில் வழங்க வேண்டும். இழப்பீடு வழங்குவதற்கான அளவுகோள்களை சேவை வழங்குவோரின் இடங்களில் இருந்து கண்காணிக்க முடியும் என்றால் தானாகவே இழப்பீடுகளை வழங்கலாம்.

நுகர்வோர் கோரிக்கை வைத்தும் அடுத்த மின்சார பயன்பாட்டு கணக்கீடு காலத்திற்குள் இழப்பீடு செலுத்தத தவறினால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் தரநிலைகளுக்கு கட்டுப்படாமல் இருந்ததற்கு இழப்பீடு கோரவும் உரிமை உண்டு. இந்த ஒழுங்குமுறை அறிவிக்கப்பட்ட பின் 6 மாதங்களுக்குள், மின் வாரயம் இதற்கான ஆன்லைன் வசதியை உருவாக்க வேண்டும், அதில் நுகர்வோர் பதிவுசெய்து இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இவ்வாறு வரைவு திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

* காலதாமதம் ஏற்பட்டால் இழப்பீடு
மின்சாரம் தொடர்பாக நுகர்வோரின் குறைகளுக்கு மின் வாரியம் பதிலளிக்க கால தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.25ம், அதிகபட்சமாக ரூ.250ம், புதிய இணைப்பு மற்றும் தற்காலிக இணைப்பு வழங்குவதில் கால தாமதம், மின் இணைப்புகளை மாற்றி அமைத்தல், கட்டணங்களில் மாற்றம் கோருதல் ஆகியவைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100ம், அதிகபட்சமாக ரூ.1000மும், மின் கணக்கீட்டில் உள்ள புகார்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றால் ரூ.150ம், மின் மீட்டர்கள் மாற்றி தர கால தாமதத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.100ம், அதிகபட்சமாக ரூ.1000மும், மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டு மீண்டும் விநியோகம் தொடங்க தாமதமாகும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ரூ.50ம், அதிகபட்சமாக ரூ.1000மும், மின்னழுத்த ஏற்ற, இறக்கங்கள் மற்றும் புகார்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் குறைகளை கண்டறிய தவறினால் ரூ.250 நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

The post புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஆன்லைன் மூலம் நுகர்வோர் இழப்பீடு பெறலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: