நடிகர் விஷால் வீட்டில் மழைநீர் சேகரிப்பு இருக்கா?

‘மழை நீர் தேங்கியிருக்கும் நிலையில் மக்களுக்கு தைரியம் கொடுக்கும் இடமாக மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்’ என நடிகர் விஷால் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு கொட்டும் மழையிலும் களப்பணியாற்றி வரும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் கூறுகையில், ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு பக்கத்து வீடு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூட தெரியாமல் அடுத்தவர்களை குறை சொல்கிறார் விஷால். மழை பாதித்த நிலையில் தெருவில் இறங்கி மக்களுக்கு என்ன உதவி செய்தார் இவர். இவ்வளவு மழை பெய்தால் அமெரிக்க ராணுவத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. அவரது வீட்டிலிருந்து ஆறாக மழைநீர் தெருவில் ஓடுகிறது. அவர் ஏன் தனது வீட்டின் மழைநீரை தெருவில் விட்டார்.

அந்த தெருவில் மழைநீர் தேங்கியதற்கு அவரும் ஒரு காரணம். அவரது வீட்டை சோதனையிட்டு பார்த்தால் மழைநீர் சேகரிப்பு இருக்கிறதா என்பதே சந்தேகம் தான். வீட்டில் பெய்த மழைநீரை கூட அவரால் சேமிக்க முடியவில்லை. ஒரு லட்சம் ரூபாய் கூட செலவாகாது, அதை கூட அவர் தனது வீட்டில் செய்யவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், ஏசி அறையில் ஓடிடியில் படத்தை பார்த்துக் கொண்டே ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும் என்பதற்காக மக்களை முட்டாளாக்கும் விதமாக காகிதப்புலியாக மாறி பதிவுகளை போட்டுள்ளார். கொட்டும் மழையில் மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தெருக்களில் கண்துஞ்சாது களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

நல் உள்ளம் கொண்டவர்கள் எவ்வளவு பேர் மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர். இவரது பதிவு அவர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. மக்கள் கொடுக்கும் பணத்தில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, தெருவில் இறங்கி வேலை பார்க்கும் மக்கள் பிரதிநிதிகளை குறை சொல்வது மிக தவறு. இனிமேலாவது தனது வீட்டில் இருந்து மழை நீரை தெருவில் விடாமல் வீட்டில் சேமித்து வைக்க அவர் முயற்சிக்க வேண்டும் என்றார்.

The post நடிகர் விஷால் வீட்டில் மழைநீர் சேகரிப்பு இருக்கா? appeared first on Dinakaran.

Related Stories: