சென்னை விமான நிலையத்தில் இரு முனையங்களாக நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் உள்நாட்டு முனையம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில், இரு கட்டங்களாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018ம் ஆண்டில் தொடங்கியது. முதல் கட்ட பணி 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. டெர்மினல் 2 கடந்த ஏப்ரல் மாதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜூலையில் இருந்து விமான சேவை நடந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச முனையமாக செயல்பட்டு கொண்டிருந்த டெர்மினல் 3, டெர்மினல் 4 ஆகியவை முழுவதுமாக மூடப்பட்டது. டெர்மினல் 3யை இடிக்கும் பணி முடிவடைந்ததும், 2ம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையே பழைய சர்வதேச முனையம் டெர்மினல் 4, நல்ல நிலையில் இருந்ததால், அதை கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த முடிவு செய்தது. அதற்கான பணி கடந்த ஆகஸ்ட்டில் தொடங்கி நிறைவடைந்துள்ளதல் நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இதில், சோதனை அடிப்படையில், விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்தன. அந்தமானில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 10.20 மணிக்கு 126 பயணிகளுடன், சென்னை புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் தரையிறங்கியது. பயணிகளை அதிகாரிகள் வரவேற்றனர். அதே போல காலை 11.10 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூருக்கு 154 பயணிகளுக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது.

நாளை அதிகாலையில் இருந்து புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4 முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது. இங்கிருந்து ஏர் இந்தியா, அதை சார்ந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் 1ல் இண்டிகோ உள்ளிட்ட மற்ற விமான நிறுவன, உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று இரு முனியங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு இட நெருக்கடி இல்லாமல், கூடுதல் இடவசதி கிடைக்கும். அதோடு சென்னை உள்நாட்டு விமான பயணிகளின் வசதிக்காக, மேலும் கூடுதலாக, உள்நாட்டு விமான சேவைகள் இயக்கபட உள்ளன என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் இரு முனையங்களாக நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் உள்நாட்டு முனையம் appeared first on Dinakaran.

Related Stories: