கனடாவில் நடந்த காவல் தடகள போட்டியில் தங்கம் வென்ற சென்னை பெண் தலைமை காவலருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!!

சென்னை: கனடாவில் நடந்த காவல் தடகள போட்டியில் தங்கம் வென்ற சென்னை பெண் தலைமை காவலருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த பெண் தலைமைக் காவலர் கனடாவில் நடந்த சர்வதேச காவல்துறை தடகள போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பதக்கங்கனை பெற்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச அளவில் காவல்துறை, தீயணைப்பு, மீட்பு படையினருக்கான ‘போலீஸ் அண்ட் ஃபயர்’ விளையாட்டு போட்டிகள் கனடாவின் வின்னிபெக் நகரில் ஜூலை 28-ம் தேதி தொடங்கி கடந்த 6-ம் தேதி வரை நடந்தன.

50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 8,500-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் இருந்தும் காவல் குழுவினர் பங்கேற்றனர். இப்போட்டியில், சென்னையில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் காவல் கரங்கள் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் லீலாஸ்ரீ 3 பதக்கங்களை வென்றுள்ளார். 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் கொண்ட ‘ஹெப்டத்லான்’ பிரிவில் தங்கம், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளி, உயரம் தாண்டுதலில் வெண்கலம் என 3 பதக்கங்கள் பெற்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கனடா சென்றுள்ள காவல் குழுவினர் வரும் 14ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர். இந்நிலையில், கனடாவில் நடந்த காவல் தடகள போட்டியில் தங்கம் வென்ற சென்னை பெண் தலைமை காவலருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், கனடாவின் வின்னிபெக் நகரில் நடந்து முடிந்த சர்வதேச போலீஸ் அண்ட் ஃபயர் விளையாட்டு போட்டியில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களைக் குவித்துள்ள தலைமைக் காவலர் லீலாஸ்ரீ அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.

The post கனடாவில் நடந்த காவல் தடகள போட்டியில் தங்கம் வென்ற சென்னை பெண் தலைமை காவலருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: