அதிகாலை விழிப்பின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒவ்வொருநாளும் இரவு தூங்கச் செல்லும்போது, பலரும் காலையில் நேரத்துடன் எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால் பலராலும் அது முடிவதில்லை. தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திரிப்பது உடல் மற்றும் மன நலத்திற்கு பல நன்மைகளை தரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம்.காலையில் சீக்கிரத்தில் விழித்தால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியுடனும் தெளிவான மனதுடனும் இருக்க முடியும். மேலும், காலையில் அதிக வேலைகளை செய்யவும் போதிய நேரம் கிடைக்கும். இதனால், நிதானமாக வேலைகளை செய்யலாம். இது செயல்திறன் மற்றும் பணிகளில் கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்த உதவுகிறது.

காலையில் நேரத்துடன் எழுந்து கொள்ளும் வழக்கத்தை உருவாக்கிக் கொள்வது சிறந்த மன ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். நிதானமாக வேலைகளை செய்ய நேரம் கிடைப்பதால் எந்த வேலையையும் பதட்டத்துடன் அவசர அவசரமாக செய்ய வேண்டியதில்லை. எனவே, மன அழுத்தம் மற்றும் பதட்ட நிலைகளை குறைக்கிறது. காலையில் சீக்கிரமாக எழுந்திரிப்பதால், இரவில் நேரத்துடனே தூக்கம் வந்துவிடும். எனவே, சரியான நேரத்தில் படுக்கைக்குச் சென்று தூங்கி சீக்கிரமாக விழிப்பது, சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் மேம்படுத்தும்.

அதிகாலையில் எழுந்திருப்பதால், நடைபயிற்சி, காலை ஓட்டம், யோகா, தியானம் அல்லது ஜிம் பயிற்சி என எதுவாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைக்கிறது. எனவே, உடல் ஆரோக்கியம் மேம்படவும் வழிவகுக்கும். வாசிப்பு போன்ற சுயகவனிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாலை நேரம் அமைதியான நேரமாக இருக்கும். நினைவாற்றல் நடைமுறைகளுடன் நாளைத் தொடங்குவது, நாள் முழுவதும் நேர்மறையான எண்ணங்களையே கொடுக்கும்.

காலை உணவு என்பது அன்றைய நாளுக்கான மிக முக்கியமான உணவாக மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் காலை உணவை நேரமின்மையால், சாப்பிட முடிவதில்லை. அதுவே, அதிகாலையில் எழுந்தால் சத்தான காலை உணவை உண்ணலாம், அது அன்றைய நாளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் ஆற்றலையும் வழங்கும். சீக்கிரமாக எழுபவர்கள் அன்றைய தினத்தை நிதானமாகவும் ஒரு நல்ல தொடக்கத்துடன் ஆரம்பிப்பார்கள். மேலும் அவர்களது வேலைகளை சமாளிக்கவும் தனிப்பட்ட இலக்குகளைத் தொடரவும் அதிக நேரமும் விருப்பமும் உள்ளதை உணர முடியும்.

அதிகாலை நேரம் பொதுவாக மற்ற நேரங்களை விட அமைதியானது மற்றும் குறைவான பரபரப்பானது. இந்த அமைதியான சூழ்நிலை பிரதிபலிப்பு, படைப்பாற்றல் மற்றும் திட்டமிடலுக்கு உகந்ததாக இருக்கும். சீக்கிரம் எழுந்திருப்பது, வரவிருக்கும் நாளுக்குத் தயாராவதற்கு காலையில் கூடுதல் நேரத்தை வழங்குகிறது. இது சிறந்த நேர மேலாண்மைக்கு வேலைகளை வழிவகுக்கும் மற்றும் அவசரப்படுதல் அல்லது படப்படப்பாக வேலைகளை செய்தல் போன்ற உணர்வுகளைக் குறைக்கலாம். அதிகாலையில் எழுந்திருப்பது உடல் ஆரோக்கியம், மனநலம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொகுப்பு: தவநிதி

The post அதிகாலை விழிப்பின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Related Stories: