பஜார் நெடுஞ்சாலையில் அடைப்புகள் சீரமைத்து மழை நீர் வெளியேற்றம்: எம்எல்ஏ ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுமார் 20,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், குறிப்பாக கும்மிடிப்பூண்டி பஜாரில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த 61 ஊராட்சி மக்களும், தினமும் வந்து போகும் பரபரப்பான பகுதியாக இந்த பஜார் உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கும்மிடிப்பூண்டியில் பெய்த மழையின் காரணமாக, கும்மிடிப்பூண்டி சாலையின் இரு பக்கமும் மழை வெள்ளம் ஆறு போல் தேங்கி காட்சியளிக்கிறது. இந்த மழை வெள்ளத்தோடு கழிவு நீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டி பஜாரில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நெடுஞ்சாலைத்துறையால் போடப்பட்ட கால்வாய்களின் மீது, ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிக்கும் சூழலில், கால்வாயில் கழிவுகள் தேங்கி தண்ணீர் வெளியேற முடியாததால், கும்மிடிப்பூண்டி பஜாரில் சாலையின் இரு புறமும் தண்ணீர் தேங்கி இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பஜாரில் இரு பகுதியில் கால்வாய்கள் மீது ஆக்கிரமித்து இருந்த கடைகளுக்குள் சென்று கால்வாய்களை வெட்டி, ராட்சத மோட்டார்கள் மூலம் அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கும்மிடிப்பூண்டியில் எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ, கால்வாய்கள் அமைந்துள்ளதோ அங்கெல்லாம், எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு, ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, திமுக மாவட்ட பொருளாளர் ரமேஷ், பேரூர் செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், துணைத் தலைவர் கேசவன், செயல் அலுவலர் யமுனா, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரவி, அப்துல் கறீம், நசரத் இஸ்மாயில், கருணாகரன், விமலா அர்ச்சுனன், காளிதாஸ், ஒன்றிய செயலாளர் மணிபாலன், ஊராட்சி மன்ற தலைவர் கீழ் முதலம்பேடு நமச்சிவாயம், ஏனாதி மேல்பக்கம் பிரபு, பெத்தி குப்பம் ஜீவா செல்வம், மாவட்ட நிர்வாகி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்கள் கூறுகையில், கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலைகளில் கடந்த ஆண்டு புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டது. அப்போது, இரு பகுதிகளில் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் பணி முடிந்தவுடன் கால்வாய்க்கு உள்ளேயே வைத்துவிட்டு, மேலே மூடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நடைபாதையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் போட்ட குப்பைகள் உள்ளே அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் கழிவு நீர் செல்ல முடியாமல் பஜார் வீதிக்கு வருகிறது என்றனர்.

The post பஜார் நெடுஞ்சாலையில் அடைப்புகள் சீரமைத்து மழை நீர் வெளியேற்றம்: எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: