ஆவணி 2வது ஞாயிறு தங்க சிம்ம வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன்

 

சமயபுரம், ஆக.28: சமயபுரம் மாரியம்மன்கோயிலில் ஆவணி 2வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி கோயில்களில் முதன்மையான கோயிலாக விளங்குகிறது. அம்மன் கோயில்களில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஆடி மாதம் முழுவதும் விசேஷம் என்றாலும் ஆவணி மாததில் வரும் ஞாயிற்றுக்கிழமை விழாக்காலம் ஆகும். ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் விரதம் மேற்கொள்வதும் வழக்கம்.

அந்தவகையில் நேற்று சமயபுரம் கோயிலில் அதிகாலையிலிருந்தே கூட்டம் அலைமோதியது. ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஞாயிறு இரவு கோயில் மண்டபங்களிலும், பிரகாரங்களிலும் படுத்துறங்கி காலையில் எழுந்து அம்மனை தரிசித்து வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆவணி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

The post ஆவணி 2வது ஞாயிறு தங்க சிம்ம வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் appeared first on Dinakaran.

Related Stories: