கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக ரூ.1000 கிடைக்கும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்படி, இந்த மாதம் தீபாவளிக்கு முன்னதாகவே ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு கட்ட நடைமுறைகளுக்கு 1.70 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.06 கோடி பேர் தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, கடந்த செப்.15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் இந்த திட்டமானது தொடங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிரின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க திட்டப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்று கிழமை வந்ததால் 14ம் தேதியே தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி மகளிர் உரிமை தொகை பெற அதிகப்படியானோர் கூட்டுறவு வங்கிகளில் மூலமாக வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர். மேலும், வங்கி கணக்கில் சிக்கல் உள்ளவர்களுக்கு மணி ஆர்டர் மூலமும் பணம் அனுப்பப்பட்டது.

அதன்படி, இம்மாதத்திற்கான தொகை அனுப்ப தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தீபாவளி பண்டிகை 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமை தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், வரும் 9 அல்லது 10ம் தேதிக்குள் வங்கிகளில் பணம் இருப்பு வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 1.70 கோடி விண்ணப்பங்களில் 70 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிராகரிக்கபப்ட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக ரூ.1000 கிடைக்கும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: