கொரோனா காலத்தில் சேகரிக்கப்பட்ட 81 கோடி இந்தியர்களின் ஆதார் விவரம் திருட்டு

புதுடெல்லி; கொரோனா காலத்தில் சேகரிக்கப்பட்ட 81 கோடி இந்தியர்களின் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தகுதி அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. ஒன்றிய அரசு சார்பில் செலுத்தப்பட்ட இந்த தடுப்பூசி போட்டவர்களின் பெயர், ஆதார் எண், செல்போன் எண் ஆகிய தகவல்கள் அந்தந்த தடுப்பூசி மையங்களில் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசு அதற்காக உருவாக்கிய கோவின் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன. இப்போதும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஒருவரது தகவல்களை கோவின் இணையதளத்தில் உரிய முறையில் அணுகினால் பெற முடியும்.

மிகவும் பாதுகாப்பான இணைய தளம் என்று ஒன்றிய அரசு அறிவித்த கோவின் தளத்தில் இருந்த தடுப்பூசி போடப்பட்ட 81.50 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் தற்போது கசிந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிடபிள்யூ என்.0001 என்ற ஹேக்கர் மூலம் இந்த தகவல்கள் வெளியே கசிந்துள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பால் கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு இந்தியர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். இதை அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஹேக்கர்கள் வெளியிட்ட தகவல்களில் 81.50 கோடி இந்தியர்களின் ஆதார், பாஸ்போர்ட் விவரங்கள், பெயர்கள், செல்போன் எண்கள், முகவரிகள் ஆகியவை வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் அனைத்தையும் விற்பனைக்காக அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு மாதிரிக்காக 1 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட அத்தனை தகவல்களும் அந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்தை இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுவினரும் எச்சரித்து உள்ளனர். இந்த தகவல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் இருந்து வெளியானதா அல்லது வேறு எங்கும் இருந்தும் வெளியானதா என்று விசாரணை நடந்து வருவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம்தெரிவித்து உள்ளது.

* 2022 நவம்பர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்திலும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் புறநோயாளிகள் சேவை, ரத்தமாதிரிகள் சேகரிப்பு பணிகள் பாதிப்பு அடைந்தது.

* இந்த ஆண்டு தொடக்கத்தில் கோவின் தளத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தகவல்கள் முதன்முறையாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post கொரோனா காலத்தில் சேகரிக்கப்பட்ட 81 கோடி இந்தியர்களின் ஆதார் விவரம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: