போனஸ் உடனே வழங்க கோரி ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 21:  ரயில்வே தொழிலாளர்களுக்கு போனஸ் உடனே வழங்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட 2 ஆயிரம் காலிப்பணியிடத்தை மீண்டும் உருவாக்கி, பணியாளர்கள் நியமிக்க வேண்டும். ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை கோட்ட தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்ஆர்இஎஸ்) சார்பில் நேற்று ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் கோட்ட தலைவர் ஜெயபாண்டி தலைமை வகிக்க, செயலாளர் கஜ்னா, ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் ஜீவன் மூர்த்தி, நிர்வாகி குமார் உள்பட பலர் பேசினர்.

இதில் சங்க ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல்  ஆண்டுதோறும் ரயில்வே தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் தொகை உற்பத்தி அடிப்படையில் தசரா பண்டிக்கைக்கு 10 நாட்கள் முன்பாக அறிவிக்கப்பட்டு பட்டுவாடா செய்யப்படும். இம்முறை இதுவரை போனசிற்கான அறிவிப்பு வரவில்லை. இந்த தாமதம் ரயில்வே தொழிலாளர்களிடையே மிகுந்த குழப்பமும், வேதனையும் நிலவுகிறது. அக்.21 (இன்று) நடைபெற உள்ள மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கான போனஸ் பற்றி நல்ல முடிவு எடுக்கும்படி மத்தியரசை வலியுறுத்தி மதுரையில் டி.ஆர்.இ.யூ சார்பாக மேற்கு நுழைவுவாயிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவி கோட்ட செயலாளர் சரவணன் தலைமை வகிக்க, கோட்ட செயலாளர் சங்கரநாராயணன், கோட்ட பொருளாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: