திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்

ராமநாதபுரம், ஏப்.27: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கடலில் நீராடி மாலையணிந்து விரதத்தை துவங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணியர் கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறை மற்றும் வைகாசி விசாகத்திற்காக ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபட்டு வருகின்றனர். இதற்காக ராமேஸ்வரம், உச்சிப்புளி, மண்டபம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி மற்றும் நயினார்கோயில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒரு வார காலமாக மாலை அணிந்து வருகின்றனர்.

ராமேஸ்வரம், சேதுக்கரை, மாரியூர் உள்ளிட்ட கடல்கள் மற்றும் பரமக்குடி வைகை ஆறு(தீர்த்தம்) ஆகியவற்றில் தீர்த்தமாடி குருநாதர்கள் கையால் மாலையணிந்து விரதத்தை துவங்கி விட்டனர். சுமார் 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை விரதம் இருக்கும் பக்தர்கள் கிராமங்களில் உள்ள கோயில்களில் இரவு நேரத்தில் பஜனை பாடி வழிபாடு செய்கின்றனர். விரத காலம் முடிந்தவுடன் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு குழுக்கள், குழுக்களாக பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கின்றனர்.

The post திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: