சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்

பரமக்குடி, ஏப்.27: கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைத்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஸ் பார் விற்பனை அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால், பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடனை, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் குறிப்பாக கடலோர பகுதிகளில் இயங்கும் ஐஸ் பார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை தடாலடியாக அதிகரித்துள்ளது. இந்த ஐஸ் கட்டிகள் அந்தந்த பகுதியில் இயங்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு நேரடியாக மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதை மீன் வியாபாரிகள், சர்பத், பழரசம் விற்பனை செய்யும் கடைக்காரர்கள், பூக்கடை வைத்திருப்போர் வாங்கி செல்கின்றனர். ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மீன்களை வாங்கி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். இவர்கள் மீன்களின் விற்பனையை பொருத்து ஒரு நாளைக்கு 4 முதல் 5 ஐஸ் பார்களை வாங்குகின்றனர். இந்த ஐஸ் கட்டிகள் ஒரு பார் ரூ.200 என மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரூ.320 என சில்லறை விலைக்கும் விற்கப்படுகிறது. மாவட்டத்தில் நடந்து முடிந்த பங்குனிப்பொங்கல் சமயத்தில் தேவை அதிகரிப்பால் ஐஸ் பார்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மற்ற பகுதிகளில் பார்களை வாங்கி வருவதற்கு ரூ.2 ஆயிரம் வரை வண்டி வாடகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐஸ் பார் நிறுவன உரிமையாளர் ரகுராம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஐஸ் பார்கள் விற்ற நிலையில் தற்போது கூடுதலாக 20 பார்கள் என தினமும் 50 ஐஸ் பார்கள் விற்பனை செய்யப்படுகிறது. புதன், சனி கிழமைகளில் கூடுதல் பார்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் காலம் துவங்கியுள்ளதால் காலையிலேயே சர்பத், பழரசம் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரிகள் ஐஸ் பார்களை வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

The post சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர் appeared first on Dinakaran.

Related Stories: