பெருந்துறை சிப்காட்டில் பாலம் கட்டும் பணி 4 மாதமாக துவங்கவில்லை

சென்னிமலை, மார்ச் 19: பெருந்துறை சிப்காட் பகுதியில் 4 மாதங்களாக பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தின் பிரதான சாலையில் இருந்து 5வது குறுக்கு தெரு சாலையில் தார்ச்சாலை அமைக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 1 கி.மீ தூரத்திற்கு ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால், 4 மாதங்கள் ஆகியும் இதுவரை தார்ச்சாலை போடாமல் இருப்பதால் அந்த பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக மாறி உள்ளது.ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால் வாகனங்களின் டயர்கள் அடிகடி பழுதாகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அதே தெருவின் கடைசி பகுதியில் பாலம் கட்டுவதற்காகவும், சாக்கடை கால்வாய் அமைப்பதற்காகவும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மண் தோண்டப்பட்டுள்ளது. ஆனால், பாலம் கட்டும் பணியும் கிடப்பில் போடப்பட்டதால் அந்த வழியே வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

சிப்காட் பகுதியில் அமைந்துள்ள பள்ளக்காட்டூர், மூனாம்பள்ளி, தாசம்பாளையம், வரப்பாளையம், ஓடைக்காட்டூர் ஆகிய ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் 5வது குறுக்கு தெரு வழியாகத்தான் ஈங்கூர், சென்னிமலை போன்ற ஊர்களுக்கு சென்று வருவார்கள்.  ஆனால், கடந்த 4 மாதங்களாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருப்பதுடன், சாக்கடை கால்வாய் மற்றும் பாலம் கட்டும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் அமைப்பதற்கும், பாலம் கட்டுவதற்கும் கம்பிகள் நடப்பட்டுள்ளது. இந்த கம்பிகள் ஈரோடு மாவட்டத்திலேயே அதிகளவு உப்புத்தன்மை கொண்ட சிப்காட் சாய கழிவுநீருக்குள் நடப்பட்டதால் அவை துருப்பிடித்து காணப்படுகிறது. இனிமேல் இந்த கம்பிகளை நம்பி சாக்கடை கால்வாய் மற்றும் பாலம் கட்டினால் அவை தாக்குப் பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட பணிகளை உடனடியாக சிப்காட் தொழிற்பேட்டை நிர்வாகம் செய்து முடிக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>