காணாமல் போன சுடுகாட்டை கண்டுபிடித்து தரக்கோரி சாலையில் கற்கள், மரக்கட்டைகளை போட்டு பொதுமக்கள் போராட்டம்

கூடுவாஞ்சேரி, மார்ச் 3: கூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சியில் காணாமல்போன சுடுகாடு மற்றும் இடுகாடு ஆகியவற்றை கண்டுபிடித்து தரக்கோரி சாலையில் கற்கள், மரக்கட்டைளை போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி  அடுத்த குமிழி ஊராட்சியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி அருகே மேட்டு ஏரி உள்ளது. இதனை ஒட்டியபடி சுமார் ஒரு ஏக்கர்  நிலப்பரப்பு கொண்ட சுடுகாடு மற்றும் இடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாடு மற்றும் இடுகாட்டை குமிழி கிராமத்தில் உள்ள ரெட்டியார் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, செல்லியம்மன் கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்துகின்றனர்.  இதனை ஒட்டியபடி மலை மற்றும் அரசு புறம்போக்கு நிலமும், ஏரிக்கரை ஓரத்தில் பல ஏக்கர் கொண்ட விளை நிலங்களும் உள்ளன. இதை ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், குறைந்த விலைக்கு வாங்கி வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்வதற்காக பிளாட் போட்டு அதில் கற்கள் நட்டு வருகின்றனர். மேலும், சுடுகாடு மற்றும் இடுகாடுகளை இரவோடு இரவாக அகற்றிவிட்டு, அதனை ஒட்டியபடி உள்ள மலை குன்றினை குடைந்து சுடுகாட்டில் சாலை அமைத்துள்ளனர்.

மேலும், அங்குள்ள நீர்வரத்து கால்வாய், அரசு புறம்போக்கு நிலம் மற்றும் ஏரிக்கரையை குடைந்து  பிளாட் போடுவதற்காக கற்கள் நட்டுள்ளனர். இதற்காக மதகுகளை உடைத்து நாசப்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக காலம் காலமாக இருந்து வந்த வேப்பமரம், புளியமரம், பூவரச மரம், பனைமரம் உள்பட பல்வேறு மரங்களை வேரோடு அகற்றிவிட்டனர். இதுபோல் ரியல் எஸ்டேட் கும்பல் அடாவடியாக சுடுகாடு மற்றும் இடுகாடுகளை அகற்றி, இரவோடு இரவாக சாலை அமைத்துள்ளதால் சடலங்களை எடுத்து சென்று புதைக்கவும், எரிக்கவும் முடியாமல் ெபாதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஏரிக்கரை மற்றும் மதகுகளை உடைத்து நாசப்படுத்தியதால் மற்ற விளை நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது, ஏரிக்கரை பலமிழந்து உள்ளதால், மழைக்காலத்தில் கனமழை பெய்தால் ஏரிக்கரை உடையும் அபாய நிலை உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் சென்று குமிழி கிராமத்தில் சுடுகாடு மற்றும் இடுகாடு காணாமல் போய்விட்டதாகவும், இதனை கண்டுபிடித்து தர கோரியும் மேலும் ரியல் எஸ்டேட் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுடுகாடு மற்றும்  இடுகாடு ஆகியவற்றை மீட்டு தரக்கோரி, அங்குள்ள சாலையில் கற்கள் மற்றும் மரங்களை  போட்டு பொதுமக்கள் நேற்று திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது, ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாடு மற்றும் இடுகாட்டில் ஆக்கிரமிப்பாளர்கள் அமைத்த சாலையை துண்டித்து, அதில்  மரங்கள் மற்றும் கற்களை போட்டு 2 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றோம். ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை. எனவே, கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories: