சமையல் மாஸ்டர், சர்வர் உள்ளிட்டோருக்கு பாஸ்டாக் சான்று கட்டாயம்: உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவு

வேலூர், மார்ச்.3: தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களிலும் சுகாதாரத்தை பாதுகாக்க சமையல் மாஸ்டர், சர்வர் உள்ளிட்டோர் பாஸ்டாக் சான்று கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் சாலையோரக்கடைகள் தொடங்கி நட்சத்திர ஓட்டல்கள் வரையில் பல ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் இயங்கி வருகிறது. காலமாற்றத்திற்கு ஏற்பவும் மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்காரணமாக ஒரு தரப்பினரும், பொருளாதார பிரச்னை காரணமாக குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பணிக்கு செல்வதன் காரணமாகவும் வீடுகளில் சமைப்பது குறைந்துவிட்டது.

இதனால் புற்றீசல்போல ஏராளமான ஓட்டல்கள் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ஓட்டல்களில் தூய்மை விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. நிறம் கூட்டிகள் அதிகளவில் விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்படுகிறது. சாப்பாட்டில் சுண்ணாம்பு கலப்பது, ஓட்டல்களில் உள்ள சமையல் அறைகள் தூய்மையாக வைக்காதது என்று விதிமுறைகள் பின்பற்றுவதில்லை. இதனால் பொதுமக்கள் பணத்தை கொடுத்து தனக்கு தானே உடல்நல பாதிப்புகளை வாங்கும் நிலை உள்ளது என்று புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய ஓட்டல்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் விதமாக கட்டாயம் ஒரு நபராவது, உணவு பாதுகாப்புத்துறை மூலம் பயிற்சி பெற்று பாஸ்டாக் (உணவு பாதுகாப்புத்துளை பயிற்சி சான்று) வைத்திருக்க வேண்டும். இதற்கான சுற்றறிக்கை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களில் பணிபுரியும் சமையல் மாஸ்டர், சர்வர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கட்டாயம் பாஸ்டாக் (உணவு பாதுகாப்பு பயிற்சி சான்று) சான்று பெற்றிருக்க வேண்டும். இதற்காக சம்மந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, இந்த சான்று இல்லாவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

Related Stories: