பொதுத்தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

கடலூர், பிப். 28: கடலூரில் அரசு பொதுத்தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத் தேர்வு வரும் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையிலும் நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை 229 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 522 மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 தேர்வை 235 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 342 மாணவ, மாணவிகளும் எழுதுகின்றனர். இதற்காக 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில வயது வந்தோர் மற்றும் முறைசாரா பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமை தாங்கினார்.

இதில் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள், பணிக்கு வரும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வெழுதும் மாணவ, மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டு பிடிபடும் மாணவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரத்தை தேர்வு மைய அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும், உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, நேர்முக உதவியாளர் முருகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: