அரசு மதுபானக் கடைகளில் அனுமதியில்லாத நேரங்களில் மது விற்பனை

தேனி, பிப். 26: தேனி மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளில், அனுமதியில்லாத நேரங்களில் மது விற்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் 85 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகர் பகுதிகளில் உள்ளன. அரசு மதுபானக் கடைகளை பொறுத்தவரை மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு மூடவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், அதிகாலை நேரத்திலும், இரவு 10 மணி முதல் விடிய, விடிய கள்ளத்தனமாக மது விற்பனை வாடிக்கையாக உள்ளது. தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கத் துறையானது கண்துடைப்பாகவே செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அனுமதியில்லாத நேரங்களில் கள்ளத்தனமாக மதுவிற்றதாக சில பாட்டில்களை பறிமுதல் செய்து அவ்வப்போது வழக்குகள் பதிவு செய்வது கண்துடைப்பாகவே இருந்து வருகிறது. எனவே, மாவட்ட காவல்துறை நிர்வாகம் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: