கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம்

கூடலூர், ஏப். 25:கம்பம் நகரின் மையப்பகுதியான வேலப்பர் கோயில் தெருவில் காய்கறிக்கடைகள், நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், லாட்ஜ், ஜவுளிக்கடைகள், வங்கிகள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டு என அனைத்தும் உள்ளதால் இப்பகுதி காலைமுதல் இரவு வரை பரபரப்பாகவே காணப்படும்.

கம்பம்-கூடலூர் தேசியநெடுஞ்சாலை அரசமரம் பகுதியிலிருந்து வேலப்பர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சாலையோர வியாபாரிகளின் ஆக்ரமிப்பு, சரக்கு ஏற்றிவரும் லாரி மற்றும் கடைகளுக்கு வரும் பொதுமக்களின் வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தப்படுவதாலும் இப்பாதையில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகராட்சி சார்பில் சாலையோர பழக்கடைகள் அகற்றப்பட்டது. சரக்கு வாகனங்களுக்கும் நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீரானது. ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் இப்பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து பழக்கடைகள் கடைகள் வைத்தனர். அதுபோல், அப்பகுதியில் உள்ள சிலர் தங்கள் கடை விளம்பர போர்டுகளை ரோட்டில் வைத்தனர். இதனால் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இது பெரும் இடையூறாக இருந்துள்ளது.

மேலும் கம்பத்தில் கடந்த 17ம் தேதி முதல் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் ஒவ்வொரு சமுதாயமத்தின் மண்டகப்படியும், தேர்பவனியும் நடைபெற்று வருகிறது. இதில் அரசமரம் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களால் கோயில் தேர்செல்வதில் இடையூறு ஏற்படுவதாக நகராட்சிக்கு பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து நேற்று நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் தலைமையில், நகரமைப்பு அலுவலர் கீதா, நகரமைப்பு ஆய்வாளர் கணேஷ்குமார், சுகாதார அலுவலர் அரசக்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வேலப்பர்கோவில் தெரு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த பழ கடைகளுக்கும், விளம்பர பலகைகள் வைத்திருந்த கடைகளுக்கும் அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கையும் செய்தார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் கூறுகையில், சாலையை ஆக்கிரமித்து கடை வைத்தவர்களுக்கு தற்போது நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மீண்டும் கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

The post கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: