தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

திருமங்கலம், பிப்.25: திருமங்கலத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரியும் இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக பஸ்ஸ்டாண்ட் பகுதிகள், புதுநகர், ஜவகர்நகர், அசோக்நகர், முகமதுஷாபுரம், முனிசீப்கோர்ட் ரோடு, உசிலம்பட்டி ரோடு, மார்கெட், சோழவந்தான் ரோடு, கற்பகம்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றனர்.

இரவு வேளைகளில் வேலை முடித்து அல்லது வெளியூர் சென்றுவிட்டு டூவீலர் மற்றும் நடந்து செல்வோரை விடாமல் துரத்தி கடிக்க வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் முக்கிய தெருக்களில் வாக்கிங் செல்வோரை விடாமல் துரத்திவருகின்றன. நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். கடந்த ஓராண்டுகளில் திருமங்கலம் நகரில் மட்டும் தெருநாய்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.திருமங்கலத்தில் உள்ள அரசுமருத்துவமனைக்கு தினசரி குறைந்து 10 பேர்களாவது நாய்கடி ஊசி போட்டு செல்லும் நிலைக்கு நாய்களின் தொல்லை அதிகரித்துவருகிறது. மேலும் நகரில் ஆங்காங்கே வீசப்படும் இறைச்சி கழிவுகளால் ஏற்படும் தொற்று நோய்களுடன் ஒருசில நாய்கள் சுற்றிவருகின்றன. நகரில் நிலவும் நாய்கள் தொல்லையால் வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும் அச்சத்துடனேயே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, நாய்களின் தொல்லை குறித்து எங்களுக்கும் புகார்கள் வந்துள்ளன. நாய்களை கொல்லைமுடியாது. அவற்றை பிடித்து கருத்தடை தான் செய்யமுடியும். கடந்த 2018ல் திருமங்கலம் நகர் பகுதியில் எடுத்த கணக்கெடுப்புபடி நகரில் 515 தெருநாய்கள் உள்ளன. இந்த 515ல் 377 நாய்களுக்கு கருத்தடை அறுவை ஏற்கனவே செய்துவிட்டோம். மீதியுள்ள 138 நாய்களுக்கு தான் தற்போது கருத்தடை செய்ய உள்ளோம். இவற்றை பிராணி முத்திரா அமைப்புடன் இணைந்து திருமங்கலம் நகராட்சி செய்யமுடிவு செய்துள்ளது. ஒரு நாய்க்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய ரூ 445 செலவாகிறது. விரைவில் நாய்களை பிடித்து கருத்தடை செய்யமுடிவு செய்துள்ளோம். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்தும் நாய்கள் நகராட்சி பகுதியில் வந்துவிடுகிறது. அவற்றை கணக்கிட்டு கருத்தடை செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,`` இரண்டு வருடங்களுக்கு முன் எடுத்த கணக்கெடுப்பின்படி நகராட்சி அதிகாரிகள், நாய்கள் எண்ணிக்கையை சொல்கின்றனர். உண்மையில் அதை விட இரண்டு மடங்கு நாய்களின் எண்ணிக்கை பெருகுகிறது. பெருவாரிய இடங்களில் முடி உதிர்ந்து ேநாய் முற்றிய நிலையில் நாய்கள் சாலையில் திரிகின்றன. இவற்றால் சாலையில் செல்லவே அச்சமாய் உள்ளது. எனவே, சாலையோர நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: