மதுரை, டிச. 17: மதுரை- தேனி சாலையில் எச்எம்எஸ் காலனி சந்திப்பு முதல் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை- தேனி மார்க்கமானது தமிழக நெடுஞ்சாலை துறையின் தேசிய நெடுஞ்சாலை அலகால் பராமரிக்கப்படுகிறது. இச்சாலையில் முடக்கு சாலை சந்திப்பு முதல் எச்எம்எஸ் காலனி சந்திப்பு வரையும், விராட்டிபத்து அடுத்த இருளாண்டி தேவர் காலனி முதல் அச்சம்பத்து இரண்டாவது பஸ் நிறுத்தம் வரையும் பல இடங்களில் சாலை சேதமடைந்து கிடக்கிறது.
இதை சீரமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரசரடி பகுதி குழு செயலாளர் ரவிக்குமார் சார்பில், தேசிய நெடுஞ்சாலை அலகின் கோட்ட பொறியாளர் சரவணனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில், ‘பிபி சாவடி முதல் டிவிஎஸ் பஸ் ஸ்டாப் வரை உள்ள பகுதிகள் உள்பட பல இடங்களில் சாலை சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்ற அதிகாரி, ஒப்பந்தாரர் வாயிலாக பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
