மதுரை, டிச. 16:அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் அதிக வசூல் செய்து சாதனை புரிந்த முகவர்களுக்கு, கலெக்டர் பிரவீன்குமார் கேடயங்கள், பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மதுரை மாவட்டம் 2022-2023ம் நிதியாண்டில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் ரூ.2213.23 கோடி, 2023-2024ம் நிதியாண்டில் ரூ.2566.48 கோடி, 2024-2025ம் நிதியாண்டில் ரூ.2286.40 கோடி என கடந்த மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.7066.11 கோடி வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் ரூ.1315.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுசேமிப்பு வசூலில் மாவட்ட, மாநகராட்சி, மண்டல, நகராட்சி அளவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் அதிக வசூல் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா நடந்தது.
இதில் வசூலில் சாதனை படைத்த மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்த சிறுசேமிப்பு முகவர் ஆதிலட்சுமி, திருப்பாலை முகவர் செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு கலெக்டர் பிரவீன்குமார் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர் கலெக்டர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் பொதுமக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கிராமப்புற மக்களும் சிறுசேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற ஏதுவாக ஊராட்சி ஒன்றிய அளவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் படித்து வேலைவாய்ப்பில்லாத மகளிருக்கு சுய வேலைவாய்ப்பாக அஞ்சலக சிறுசேமிப்பு முகவராக நியமனம் செய்யப்படுகின்றனர்.
இவர்கள் மூலமாக சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களை அஞ்சலக ஆர்.டி சேமிப்பு கணக்கை துவக்கி பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது’’ என்றார். இதில மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், மாவட்ட சேமிப்பு அலுவலர் பரமேஸ்வரி, தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் சிறுசேமிப்பு முகவர்கள் கலந்து கொண்டனர்.
