மாற்றுத்திறனாளிகளுக்கு தடகள குழு விளையாட்டு போட்டி

நாகை,பிப்.13: மாற்றுத் திறனாளிகளுக்குரிய மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது என்று கலெக்டர் பிரவீன்பி நாயர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2019 -2020ம் ஆண்டு மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்குரிய தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் 14ம் தேதி 9 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்படவுள்ளது. தடகள போட்டிகளில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. முற்றிலும் பார்வையற்றோருக்கு 50மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய போட்டிகளும் நடைபெறுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தி சுவாதினம் முற்றிலும் இருக்காது அவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், புத்தி சுவாதினம் தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், மூளை நரம்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், காது கேளாதோருக்கு 100மீட்டர் ஒட்டம், 200மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. குழு விளையாட்டுப் போட்டியில் கை, கால் ஊனமுற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுபந்து போட்டி (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) ஒரு அணிக்கு 5 நபர்கள் மற்றும் மேசைப்பந்து போட்டி ஒரு அணிக்கு 2 நபர்கள் கலந்து கொள்ளலாம். கண்பார்வையற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அடாப்டட் வாலிபால் போட்டியில் ஒரு அணிக்கு 7 நபர்கள் கலந்து கொள்ளலாம்.

மன நலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எறிபந்து போட்டி ஒரு அணிக்கு 7 நபர்கள் கலந்து கொள்ளலாம். காது கேளாத ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி ஒரு அணிக்கு 7 நபர்கள் கலந்து கொள்ளலாம். மேற்படி தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. குழு போட்டிகளில் முதல் இரு இடங்களை பெறுபவர்களுக்கும், தடகளப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடத்தை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். போட்டிகளில் நாகை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்,இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: