நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 எக்டேரில் கோடைகால சாகுபடி செய்ய இலக்கு

நாகப்பட்டினம், மே1: கோடை கால சாகுபடியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் 25 எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேளாண்மை உற்பத்தி சிறப்பு திட்டமானது ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடை கால பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருமானத்தை உயர்த்திடவும், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற கொள்கையை நடை முறைப்படுத்தும் விதமாகவும், சிறப்பு வேளாண்மை உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி நெல் சாகுபடி செய்யும் பகுதிகளில் மிக சன்ன ரக நெற்பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்திடவும், எள் சாகுபடியை ஊக்குவித்து சாகுபடி பரப்பினை மேலும் அதிகரித்திடவும், பயறு வகை பயிர்கள் சாகுபடியினை அதிகரித்திடவும், சிறு தானிய பயிர் சாகுபடி விவசாயிகளின் வருமானத்தினை உயர்த்திடவும், நிலக்கடலை சாகுபடி பரப்பினை அதிகரித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை கால சாகுபடிக்கு பயறு வகை பயிர்கள் 25 எக்டேரிலும், எள் 200 எக்டேரிலும் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைந்த காலத்தில் குறைந்த அளவு நீர்த்தேவையுள்ள எள், உளுந்து மற்றும் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயன்பெற வேண்டும். எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும் என கலெக்டர் ஜானி டாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 எக்டேரில் கோடைகால சாகுபடி செய்ய இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: