வெறிச்சோடிய வேளாங்கண்ணி

நாகப்பட்டினம்,ஏப்.28: வெயிலின் கொடுமையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர்பிரதேசம் நிறைந்த சுற்றுலா தலங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்து காணப்படும் வேளாங்கண்ணி கடற்ரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வெயிலின் தாக்கம் காரணமாக குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தங்களது வீடுகளிலேயே முடங்கி போய் இருக்க விரும்புகின்றனர்.

இதனால் கோடை விடுமுறை நாளில் கோலாகலமாக இருக்கும் வேளாங்கண்ணி கடற்கரை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது. இதுகுறித்து வேளாங்கண்ணியை சேர்ந்த பூக்கடை சங்க தலைவர் நாகராஜன் கூறியதாவது: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், அரியலூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படி வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே செல்வதால் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு கோடை விடுமுறை நாளில் குடும்பத்தோடு வருகை தருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலா வேளாங்கண்ணி பேராலயம் வந்து பின்னர் வேளாங்கண்ணி கடற்கரையில் பல மணி நேரம் அமர்ந்து இருந்து செல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. அதே போல் பிற மாநிலங்களில் தேர்தல் நடப்பதாலும் வேளாங்கண்ணிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. வெயிலில் தாக்கத்தினால் வேளாங்கண்ணியில் எங்களை போன்ற வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் காலை 9 மணிக்கு மேல் நிற்க முடியவில்லை. அந்த அளவிற்கு வெப்ப அனல் காற்று வீசுகிறது. இதனால் மாலை 4 மணி வரை வேளாங்கண்ணியில் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. அப்படி வந்தாலும் உடலில் சத்துக்கள் குறைந்து மயக்கம் ஏற்படுகிறது. இதற்காகவே வியாபாரிகள் காலை நேரங்களில் வருவது இல்லை. இதனால் வேளாங்கண்ணி பகுதியில் வியாபாரம் மந்தமாகவே உள்ளது.

வியாபாரம் குறைந்து காணப்படுவதால் தினசரி செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றார். கோடை விடுமுறையில் ஆன்மீக தலங்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இயற்கை கோடை மழை பொழிந்தால் மட்டுமே பூமி குளிர்ச்சி அடையும்.

The post வெறிச்சோடிய வேளாங்கண்ணி appeared first on Dinakaran.

Related Stories: