நாகப்பட்டினத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்

 

நாகப்பட்டினம்,ஏப்.29: இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் செயற்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. தலைவர் சுபாஷ்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சிவசண்முகம், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் சங்கர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகப்பட்டினம் எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் பேசினார். கூட்டத்தின் முடிவில் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் மனு கொடுக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் கிராமத்தில் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்டி டாக்டர் இல்லை.

கார்டியாலிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இல்லை. எனவே நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக மாற்றம் செய்ய வேண்டும். நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் பாலம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நாகப்பட்டினம் நகர பகுதிக்குள் வருவதற்கு இந்த ஒரு பாலம் மட்டுமே உள்ளதால் இந்த பாலத்தை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகப்பட்டினம் நகர பகுதி முழுவதும் பிரதமர் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நாகப்பட்டினம் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் பொதுத்துறை நிறுவனத்தில் 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பணிகள் முடிந்து ஆலையில் பணிகள் தொடங்கும் போது 50 சதவீத பணிகளை நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். எஞ்சிய 50 சதவீத பணிகளை பிற மாநில இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். நாகப்பட்டினத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும். கொச்சின் போன்ற இடங்களில் உள்ளதுபோல் உயர்ரக வசதி கொண்ட மீன்பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும். அதே போல் திருச்சியில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் ரயில்கள் இயக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர். மனுவை பெற்ற எம்எல்ஏ பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

 

The post நாகப்பட்டினத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: