விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில் ஒரேநாளில் 26 ரவுடிகள் கைது

விழுப்புரம்,  பிப். 7: விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசிபெட்ரோல் பங்க் மேலாளர் கொலை  சம்பவம் எதிரொலியாக, விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில் கொலை,  கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 26 பேரை ஒரே நாளில் போலீசார் கைதுசெய்தனர்.  அவர்கள் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டோம்  என்றும் டிஎஸ்பி சங்கர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழுப்புரம் திருநகரில் பிரகாஷ்  என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 4ம் தேதி,  பிரபல ரவுடியான அசார் பெட்ரோல் குண்டுகளை வீசி, மேலாளர் சீனுவாசன் என்பவரை  படுகொலை செய்தார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும்பரபரப்பை  ஏற்படுத்தியது. ஏற்கனவே அசார் மாமூல் கேட்டு மிரட்டிய பிரச்னையில், போலீசாரை  நம்பிதான் பெட்ரோல் பங்க் உரிமையாளரான பிரகாஷ், அசார் மீது  புகார் அளித்துள்ளாராம். போலீசாரை நம்பிச்சென்ற நிலையில் பட்டப்பகலில்,  பொதுமக்கள் சகஜமாக வந்துசெல்லும் இடத்திற்கே வந்து சர்வ சாதாரணமாக கொலையை  அரங்கேற்றி விட்டு சென்றுள்ளாராம் பிரபலரவுடி.

இதனால் காவல்துறை மீதான  நம்பிக்கை பொதுமக்களிடமும், தொழிலதிபர்களிடமும் இழந்துவருவதாக ஒரு  பேச்சு அடிபட்டு வருகிறது. இழந்த நம்பிக்கையை கொண்டு வரவும், மீண்டும் தனது  அதிரடியை காட்டவும் மாவட்டகாவல்துறை அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முக்கிய குற்றவாளி அசாரை சுட்டுப்பிடிக்கவும் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக தனிப்படை போலீசார்,  தற்பாதுகாப்புக்கு துப்பாக்கியுடன் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.  இந்தநிலையில்தான், அசார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டாராம்.  இல்லையென்றால் காவல்துறையின் சரவெடி, வெடித்திருக்கும் என்கின்றனர்.  இதனிடையே விழுப்புரம் காவல்உட்கோட்டத்தில் டிஎஸ்பி சங்கர் உத்தரவின்பேரில்,  கொலை, கொலைமுயற்சி வழக்கில் தொடர்புடையவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு ஒரே  நாளில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் டிஎஸ்பி  அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு டிஎஸ்பி சங்கர் முன்னிலையில், இனிஎந்த  குற்றங்களிலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இது  தொடர்பாக டிஎஸ்பி சங்கர் கூறுகையில், 26 பேரில் 8 பேர் கொலைவழக்கில்  தொடர்புடையவர்கள், 3 பேர் இரண்டு கொலைவழக்கில் தொடர்புடையவர்கள்.  கொலைவழக்கு, கொலைமுயற்சி வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறை தொடர்ந்து  கண்காணித்து வருகிறது.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால்  தடுப்புக்காவலில் கைதுசெய்து வருகிறோம். இவர்களில் பலர் தற்போது திருந்தி  சொந்த தொழில் செய்துவருகிறார்கள். விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில்  ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட 57 பேர் கை, கால்முறிவோடு (பாத்ரூமில் வழுக்கி விழுந்து) இருக்கிறார்கள்.  கடந்த காலங்களைக்காட்டிலும் விழுப்புரம் காவல்உட்கோட்டத்தில்  குற்றச்சம்பவங்கள் பெருமளவு குறைக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு  கட்டுப்பாட்டில் இருப்பதாக டிஎஸ்பி கூறினார்.

Related Stories: