பள்ளி பரிமாற்றத் திட்டத்தில் திருவிடைக்கழி பள்ளி மாணவர்கள் தில்லையாடி பள்ளியில் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஜன.22: நாகை மாவட்டம், திருவிடைக்கழி பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தில் தில்லையாடி பள்ளியில் பங்கேற்றனர். 2016-17 கல்வியாண்டு முதல் பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கிராமப்புற பள்ளிகள், நகர்ப்புற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த பரிமாற்றம் மூலம் இணைப்பு பள்ளியில் உள்ள வசதிகள் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் பள்ளியை சுற்றியுள்ள வளங்கள், இயற்கை சூழல்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளிட்டவைகளை பார்த்து மாணவ, மாணவிகள் புதிய அனுபவத்தை பெறுகின்றனர். இத்திட்டத்தில் 8ம் வகுப்பு பயிலும் 20 மாணவ, மாணவிகள் பயனடைகிறார்கள்.

இத்திட்டத்தில் பயனடையும் ஒரு மாணவனுக்கு 150 ரூபாய் வீதம் 20 மாணவர்களுக்கும் மாணவர்களின் உணவு, போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.3000த்தை கல்வித்துறை வழங்குகிறது. இத்திட்டத்தில் நேற்று திருவிடைக்கழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள், 10 மாணவிகள் தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகளை ஆசிரியர்களால் எடுத்து கூறப்பட்டது. பேரிடர் மேலாண்மை குறித்து திரையில் குறும்படங்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. திருவிடைக்கழி பள்ளி தலைமை ஆசிரியர் மாலா, தில்லையாடி பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: