சேதுபாவாசத்திரம் அருகே மதுபான கூடாரமாகிய பயணியர் நிழற்குடை

சேதுபாவாசத்திரம், ஜன.20: சேதுபாவாசத்திரம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கென அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை மதுக்கூடாரமாக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரியங்கோட்டை ஊராட்சி மாசாகாடு சாலையில், அட்லாண்டிக் பன்னாட்டுப் பள்ளிக்கு அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. பயணிகளின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த நிழற்குடையை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து, அமர்ந்து கொண்டு இரவு, பகல் எந்நேரமும் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பயணிகள், பொதுமக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி செல்வோர் மழைக்கும், வெயிலுக்கும் நிழற்குடையில் ஒதுங்க முடியாமல் சாலை ஓரத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து மது அருந்தும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: