தஞ்சாவூர், டிச.17: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சிவகாசியில் போக்குவரத்து ஏஐடியுசி 16வது மாநில மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு போக்குவரத்து அரசு கழக தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாநில துணைத் தலைவர் துரை.
மதிவாணன் ஆகியோர் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்துவது, போக்குவரத்து கழக ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (புதன்கிழமை) முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் சிவகாசியில் போக்குவரத்து ஏஐடியுசி சம்மேளனத்தின் 16வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இன்று தொழிலாளர் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
18, 19 ஆகிய தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆறுமுகம் தலைமை வகிக்கிறார். சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் விஜயபாஸ்கர் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். ஏஐடியுசி தேசிய துணைத் தலைவர், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தேசிய செயலாளர் மூர்த்தி, மாநிலத் தலைவர் காசி விசுவநாதன், மாநில பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், மாநில செயலாளர்கள் சந்திரகுமார், தில்லைவனம் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைதுறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தமிழ்நாடு நிதி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றுகிறார்கள். ஐயப்பன், ரவி, தரன் மாநாட்டில் தலைமை வகிக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, பொண்ணுப்பாண்டியன், முன்னாள் எம்.பி க்கள் அழகிரிசாமி, தேசிய செயலாளர் வகிதா நிஜாம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டலங்களிலிருந்து 200 தொழிலாளர்கள் இன்று நடைபெறும் பேரணியிலும், 50 பேர் இரண்டு நாள் நடைபெறும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
