கலெக்டர் தொடங்கி வைத்தார் 4,181 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.6.60 கோடியில் வட்டியில்லா கடன்: தஞ்சை மேயர் தகவல்

தஞ்சாவூர், டிச.13: தஞ்சை மாநகராட்சி சார்பில் இதுவரை 4,181 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.6.60 கோடி வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதலோடு தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகள் பயன்படும் வகையில் அவர்களுக்கு வங்கி மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் முதலில் ரூ.10,000மும் அந்த கடன் முடிவுற்ற பிறகு ரூ.25,000மும் அதன்பிறகு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2,929 சாலையோர வியாபாரிகள் ரூ.10,000 மும், 1,035 சாலையோர வியாபாரிகள் ரூ.25,000 மும், 217 சாலையோர வியாபாரிகள் ரூ.50,000மும் மொத்தம் 4,181 சாலையோர வியாபாரிகள் வட்டியில்லா கடன் பெற்று பயனடைந்துள்ளார்கள். இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 4,181 பேருக்கு ரூ.6.60 கோடி வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சாலையோர வியாபாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டும், அவர்களது நலன் கருதி குழுக்கள் அமைக்கப்பட்டு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மேயராக மாநகராட்சியால் செய்யப்பட்டிருந்த விதி 270 வசூலின் கீழ் சாலையோர கடைகளுக்கான தொகையினை தினந்தோறும் வசூல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களிலும் சாலையோர கடைகளுக்கு எவ்விதமான தொகையும் வசூல் செய்யப்படாது. சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனை பெறுவதற்கும், வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கும் மாநகராட்சியினை அணுகி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: