பேராவூரணி, டிச.18: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ராணி தலைமை வகித்தார். பேராசிரியர் உமா வரவேற்றார். அப்போது, ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவர் நந்தினி பேசுகையில்: தமிழக அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பாலின பாகுபாடின்றி மாணவர்கள் கல்வி கற்கவும், பாலின சமத்துவம், உளவியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உருவாக்கப்பட்டது தான் பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு.
இதன் நோக்கம் மாணவர்கள் மத்தியில் பாலின உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகளைக் கண்காணித்துத் தீர்வு காண்பது, மேலும் உளவியல் நிபுணர்களின் உதவியுடன் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதாகும். கல்லூரிகளில் பாலினம் சார்ந்த பிரச்சனைகள், துன்புறுத்தல்கள், மனநலப் பிரச்சனைகள் ஆகியவற்றைக் கண்காணித்து, பாலின சமத்துவம், பாலியல் ஆரோக்கியம், மனநலம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது மற்றும் கல்லூரிகளில் சமூக மாற்றத்திற்கான அடித்தளத்தை உருவாக்குவது குழுவின் நோக்கங்கள் என்றார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஸ்வேதா, சுஜிதா, சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஜமுனா நன்றி கூறினார்.
