சாலை பாதுகாப்பு வாரவிழாவை மறந்த அதிகாரிகள் உத்தமபாளையத்தில் அதிகரிக்கும் விபத்துகள் முறையாக நடத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

உத்தமபாளையம், ஜன.14: உத்தமபாளையம் பகுதிகளில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுவதை வட்டாரபோக்குவரத்து அதிகாரிகள் மறந்துவிட்டனர். இதனால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. தேனிமாவட்டத்தில் தேனி, உத்தமபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. உத்தமபாளையத்தில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் போடி, சின்னமனூர், கூடலூர், கம்பம் உள்ளிட்ட நகராட்சிகளும், உத்தமபாளையம், ஓடைப்பட்டி, தேவாரம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மோட்டார் வாகனஆய்வாளர் அலுவலகத்தின் மூலமே டூவீலர் லைசென்ஸ், நான்குசக்கர, கனரக வாகனங்கள் ஓட்டுநர்உரிமம், இன்சூரன்ஸ், பெர்மிட், புதிய எண்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் காலை முதலே கூட்டம் அலைமோதி காணப்படுவதுண்டு.

இவை தவிர அனுமதி இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தை மதிக்காமல் இயங்கும் வாகனங்கள் பற்றிய கண்காணிப்பையும் மேற்கொள்ளவேண்டும். இவை எல்லாம் முறையாக நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மோட்டார் வாகன அதிகாரிகள் புரோக்கர்கள் கண்களை காட்டும் ஆவணங்களுக்கே அனுமதி தருவதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் மூலமே வரக்கூடிய அத்தனை மேட்டர்களுக்கும் ஓ.கே. தருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தேனிமாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அலுவலகங்கள் மூலமாக சாலை பாதுகாப்பு வாரவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஹெல்மெட் அணிவதன் நோக்கம், லைசென்ஸ், வாகனங்களை இயக்குதலில் கவனம், சட்டவிரோதமாக இயக்கப்படும் வாகனங்களின் ஆபத்துக்கள், சாலைகளில் வாகனங்களை ஓட்டிசெல்லும் முறைகள் பற்றி விளக்கப்படுகின்றன. ஆனால் இதனை எல்லாம் உத்தமபாளையத்தில் இயங்ககூடிய வட்டாரபோக்குவரத்து அலுவலகங்களில் செய்யாமல் உள்ளனர். எல்லா ஊர்களிலும் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி விளக்கவேண்டிய அதிகாரிகளே இதனை அனுசரிக்காமல் கண்டும், காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மக்கள் நடமாடக்கூடிய இடங்களில் இதுவரை எந்தவிதமான விழிப்புணர்வு பேரணியோ, முகாம்களோ நடத்தாமல் உள்ளனர். ஆனால் வழக்கம்போல் அலுவலகங்களில் மட்டும் வாங்குவதை வாங்கி கொண்டு பணிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்துள்ள புகாரில், சாலை பாதுகாப்பு வாரங்கள் மக்கள்கூடும் இடங்களில் கொண்டாடப்படவேண்டும். இதற்கு உரித்தானவர்கள் வட்டாரபோக்குவரத்து அதிகாரிகள்தான். இவர்களோ உத்தமபாளையம், அதற்கு கட்டுப்பட்ட ஊர்களில் நடத்தாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தாமல் மவுனம் காக்கின்றனர் என்பது தெரியவில்லை. அலுவலகத்திற்கு வரக்கூடிய மக்களிடம் சுரண்டல் நடவடிக்கையில் ஈடுபடும் புரோக்கர்களையும் வெளியேற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: