பேராவூரணி நகரில் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்காவிட்டால் போராட்டம்

பேராவூரணி, ஜன. 10: பேராவூரணியில் நகரில் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை- அறந்தாங்கி செல்லும் முக்கிய சாலை கடந்த பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பேராவூரணிக்கு வரும் வாகனங்கள் இந்த சாலையை கடக்காமல் எந்த பகுதிக்கும் செல்ல முடியாத முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். ஏற்கனவே சாலை மோசமாக இருந்த நிலையில் கடந்த 2 மாதமாக பெய்த மழையில் குண்டும், குழியுமாக மாறி விட்டது. இந்த சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வபோது விபத்துகள் ஏற்படுகிறது. சாலையும் தெரியாமல், பள்ளமும் தெரியாமலும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனத்ததை இயக்கி வருகின்றனர்.கடந்த 15 நாட்களுக்கு மேலாக பேராவூரணி பகுதியில் மழை பெய்யவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைத்திருக்கலாம். ஆனால் இன்று வரை சாலையை சீரமைக்கவில்லை. பேராவூரணி அரசு மருத்துவமனையில் துவங்கி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகிலும், ரயில்வே நிலையம், ஸ்டேட் பாங்க், பேருந்து நிலையம், நீலகண்டபிள்ளையார் கோயில் வரை தார்ச்சாலை மிகவும் பள்ளமும் படுகுழியுமாக காணப்படுகின்றது. மோசமான இந்த சாலையில் பயணிக்கும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் யாரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து பேராவூரணி வர்த்தகர் கழக தலைவர் ராஜேந்திரன், செயலாளர் குமரேசன், பொருளாளர் ஜகுபர்அலி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்து ஒரு மாதம் கடந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்கவில்லை என்றால் வர்த்தகர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என வர்த்தக கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: