தஞ்சாவூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடு உயர்வு

 

தஞ்சாவூர்,ஏப்.24: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என தென் மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களாகவே கடும் வெயில் வாட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் கடும் வெப்பத்தை பயிர்கள் தாங்க முடியாத நிலை போன்றவற்றால் விளைச்சல் குறைந்து வருகிறது . இதனால் தமிழகத்தில் சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன்படி தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டிற்கும் வழக்கத்தை விட குறைவான அளவில் காய்கறி லோடு வந்து இறங்குகிறது. இதன் காரணமாகவும், நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால் தேவை அதிகம் என்பதாலும் காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று கணிசமாக உயர்ந்து கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனையாகின. இதேபோல் அவரைக்காயும் கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

குடைமிளகாய் ரூ.70, கத்தரிக்காய் ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரை, பெரிய வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.40, பாகற்காய் ரூ.70, பச்சை மிளகாய் ரூ.45, இஞ்சி ரூ.160, பீட்ரூட் ரூ.50, சவ்சவ் ரூ.50, வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.50, தக்காளி ரூ.20 முதல் ரூ.25, கோவக்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.40-க்கும் விற்பனையாகின. இவற்றின் விலையும் கடந்த வாரங்களை விட அதிகமாகும்.கடும் வெயிலால் வரத்து குறைந்தது காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தஞ்சாவூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: