தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை

தஞ்சாவூர், ஏப்.30: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மைய பகுதியில் ஆளில்லா விமானம் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் கடந்த 19ம் தேதி அன்று முடிவடைந்துள்ள நிலையில் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதிவாரியாக பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு மாநில காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு பணிகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணிநேர தீயணைப்பு வண்டிகள் மற்றும் வீரர்கள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்கவிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: