கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகம் 10ம் ேததி முற்றுகை

வலங்கைமான்,ஜன.8: வலங்கைமான் அடுத்த வடக்குபட்டம் கிராமத்தில் பகுதிநேர அங்காடி கேட்டு தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த போது வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தின்படி அங்காடி திறக்கப்படாததால் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக முற்றுகை போராட்டம் 10ம்தேதி நடைபெற உள்ளதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த வடக்கு பட்டம் கிராமத்தில் வசிக்கும் 250 குடும்ப அட்டைதாரர்கள் தெற்கு பட்டம் கிராமத்தில் உள்ள அங்காடியில் அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு பட்டம் வருவாய் கிராமத்திற்கென தனியாக ஒரு பகுதிநேர அங்காடியாவது திறக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பலமுறை அரசுக்கு கோரிக்கை அனுப்பபட்டுள்ளது. இதற்கு உரிய தீர்வு காணப்படாத நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருந்தனர்.

இதையடுத்து வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் தெய்வநாயகி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர், அரித்துவாரமங்கலம் எஸ்ஐ மற்றும் வடக்குபட்டம் கிராமவாசிகள் முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பதால் தேர்தல் முடிவுற்றவுடன் ஜனவரி மாதத்தில் வடக்கு பட்டம் கிராமத்தில் புதிய அங்காடி புல எண்117 சியில் கட்டிடம் கட்ட பரிந்துரை செய்யப்படும். மேலும் அம்மக்களின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் பொருட்களை இருப்பில் வைத்து வியாழன் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து வடக்குபட்டம் கிராமவாசிகள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டனர்.இந்நிலையில் சமாதானகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உரிய நடவடிக்கை எடுக்காததால் வடக்கு பட்டம் கிராமத்தில் உடனடியாக பகுதிநேர அங்காடியாவது திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வடக்குபட்டம் கிராமவாசிகள் வரும்10ம் தேதி திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Related Stories: