நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் கட்டுபாட்டு அறை அலுவலர்களுக்கு பாராட்டு

திருவாரூர், ஏப். 27: திருவாரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் கட்டுபாட்டு அறை அலுவலர்கள் மற்றும் தனிப்பிரிவு போலீசாரை எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டினார். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை எம்.பி தொகுதிக்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் எம்.எல்.ஏ தொகுதிகள் மற்றும் தஞ்சை எம்.பி தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ தொகுதி ஆகியவைகளுக்கு தேர்தல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கு எஸ்.பி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட கூடிய கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு டி.எஸ்.பி பிரான்க்ளின் கென்னடி தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசாரை கொண்டு செயல்பட்டது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தேர்தல் பணியில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் சிறப்பாக பணியாற்றிய கட்டுபாட்டு அறை போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசாருக்கான பாராட்டு விழா நேற்று முன்தினம் எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் அமைதியாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

வாக்குசாவடி மையங்களில் அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் பூத்துக் கொட்டகை 200 மீட்டருக்கு அப்பால் தான் உள்ளது என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளையும் போலீசார் உரிய முறையில் கடைபிடித்ததன் காரணமாக பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் அமைதியாக தேர்தல் முடிந்துள்ளது. இதுமட்டுமின்றி கட்டுபாட்டு அறைக்கு வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக போலீசார் சிறந்த முறையில் பணியாற்றியதால் விரைந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. எனவே இந்த பணியில் ஈடுப்பட்ட போலீசாரை பாராட்டுவதாக தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் கட்டுபாட்டு அறை அலுவலர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: